“ஆசனம்” இல்லாமலே சிம்மாசனம் ஏறினார் ரணில்!

இலங்கை  வரலாற்றை திரும்பி பார்க்கும் வகையில் பல சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வருகின்றன. அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் அமைந்துள்ளன. அந்தளவுக்கு மக்களின் போராட்டம் பலவற்றையும் மாற்றம் செய்துள்ளது.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் தங்களுடைய காலத்தை நீடித்துக்கொள்ளும் வகையிலேயே காய்களை நகர்த்தியிருந்தனர். மூன்றாவது தவணைக்காக எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தமையும் வரலாறாகும்

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜயவர்தன 10 வருடங்களும்,சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க 11 வருடங்களும் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ 9 வருடங்களும் ஜனாதிபதியாக ஆட்சி புரிந்தனர். எனினும், இறுதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, 2 வருடங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.

  மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஈடுகொடுக்க முடியாமையால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னுடைய இராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு 2022 ஜூலை 14ஆம் திகதி இரவு அனுப்பியிருந்தார். அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர், “ஜனாதிபதி கோட்டாய ராஜபக்‌ஷ” இராஜினாமா செய்துள்ளதை நேற்று (15) உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, நாட்டைவிட்டு கடந்த 11 ஆம் திகதியன்று மாலைதீவுக்கு தப்பியோடியதை (தற்போது சிங்கபூரில் இருக்கின்றார்) அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக தனது பொறுப்புகளை முன்னெடுத்திருந்தார். கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அனுப்பிவை வைத்ததன் பின்னர், சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று (15) வெளியானது.

அதனையடுத்து, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நேற்று (15) காலை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு ​தோல்வியடைந்தார். 1999 இல் சந்திரிகாவிடமும், 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன்பின்னர் நடைபெற்ற இரண்டு ஜனாதிபதித் தேர்தலிகளிலும் தான் போட்டியிடாது பொது வேட்பாளரை களமிறங்கினார்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்து 2010 ஆம் ஆண்டு, இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும், 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவையும் களமிறக்கினார்.

இதில், மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்ததன் பின்னர், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிடினும் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, 100 நாள் வேலைத்திட்டத்தினை முன்வைத்து, அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி, மீண்டும் பிரதமரானார்.

ஜனாதிபதியாக தான் போட்டியிடுவதற்கு கிடைத்த இரண்ட சந்தர்ப்பங்களையும் விட்டுக்கொடுத்த ரணில் விக்கிரமசிங்க, மூன்றாவது சந்தர்ப்பமாக, 2019 ஆம் ஆண்டு கிடைத்த சந்தர்ப்பத்தை தனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாஸவுக்கு விட்டுக்கொடுத்தார்.

அத்தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தார். அதன்பின்னர் 2020.08.05  அன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சஜித் தலை​மையில் ​ஐக்கிய மக்கள் சக்தியும், ரணில் விக்கிரமசிங் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிட்டது.

இதில், ஓர் ஆசனத்தையேனும் வெற்றிக்கொள்ளாது ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்தது. சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, இரண்டாவதாக கூடுதலான ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சியாகியது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்த தேர்தலில் ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசன​மே கிடைத்தது. அதுவும் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் வெற்றிடமாகவே இருந்தது. இறுதியில் அக்கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே நியமிக்கப்பட்டார்.

தனியொரு ஆளாக நின்று, அரசாங்கத்தின் விமர்சனத்துக்கு, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து, தன்னை யாரென்று காட்டிக்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, நெருக்கடி ஏற்படப்போவது தொடர்பில். ஆரூடமும் கூறிவந்தார்.

இந்நிலையில் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்தன. தாங்கிக்கொள்ள முடியாத மக்கள் வீதிக்கு இறங்கினர். ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. “கோட்டா கோ கம”, “மைனா ​கோ கம” உருவாகின. நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

இதனையடுத்து மே.9 ஆம் திகதியன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். அவரது வெற்றிடத்தை நிரப்புவதில் ஏற்பட்டிருந்த சிக்கலை தீர்ப்பதற்குள், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியமித்தார்.

எனினும், போராட்டங்கள் வலுப்பெற்றன. கோட்டா மட்டுமன்றி, ரணிலும் வெளியேறவேண்டுமென போராட்டக்காரர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்தன. இதற்கிடையில், ஜூலை 9 ஆம் திகதியன்று, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் உள்ளிட்டவற்றை போராட்டக்காரர்கள் கைப்பறிக்கொண்டனர்.

அதன்பின்னரே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜூலை 13 புதன்கிழமை இராஜினாமா செய்வதாக, ஜூலை 9 ஆம் திகதியே அறிவித்திருந்தார். எனினும் அவரது இராஜினாமா கடிதம், ஜூலை 14 ஆம் திகதியன்று இரவே கிடைத்தது. சபாநாயகர் உத்தியோகபூர்வமாக நேற்று (15) அறிவித்தார். நேற்றையதினமே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பொதுத் ​தேர்தலில் ஓர் ஆசனத்தையுமே வெற்றிக்கொள்ளாது, தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு நுழைந்த ரணில் விக்கிரமசிங்க, பிரதமராகி இன்று சிம்மாசனம் ஏற்றிருக்கின்றார். இதுவும் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *