விமான நிலையத்தில் கோட்டாவை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் முக்கிய சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் இரவைக் கழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் அவர் நாளை புதன்கிழமை பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்திற்கான வழியை தெளிவுபடுத்துவதாகவும் உறுதியளித்தார்.

எனினும் தப்பிச்செல்லும் போது தமது சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ளதாக ஏஎப்பி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

73வயதான ஜனாதிபதி கோட்டாபய, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தாம் பதவி விலகுவதற்கு முன் வெளிநாடு செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது. எனினும் குடிவரவு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துவிட்டனர்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் இன்று அதிகாலை குடிவரவு அதிகாரிகளால் தடுக்கப்பட்டார். இதனையடுத்து குடிவரவு ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விரைவுச் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இந்தநிலையில் பசில் ராஜபக்ச, விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார். இதற்கிடையில் 17.85 மில்லியன் ரூபா (50,000 டொலர்) பணத்துடன், ஆவணங்கள் நிறைந்த பெட்டி ஒன்று கோட்டாபய ராஜபக்சவினால், ஜனாதிபதி மாளிகையில் விட்டுச்செல்லப்பட்டுள்ளது. அது தற்போது கொழும்பு நீதிமன்றத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தரப்புக்கள் தெரிவித்தன.

இதேவேளை கோட்டாபய மற்றும் பசில் ஆகியோருக்கு விமான நிலையங்களின் ஊடாக தப்பிச்செல்ல ஒரு கடற்படைக் கப்பல் மூலம் இந்தியா அல்லது மாலைதீவுக்கு செல்வதே தற்போதுள்ள வழியாகும் என்று பாதுகாப்பு தரப்பை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை புதன்கிழமை ஜனாதிபதி பதவியை ராஜினாமாச் செய்வது உறுதியான தகவல் என்று சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையங்களின் இடையே விமானப்படை உதவியுடன் ஜனாதிபதி தனது நடமாட்டங்களை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் அவர் வேற்று நாட்டுக்குத் தப்பிச் செல்லும் முயற்சியில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியிருந்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *