மஹிந்த,பசில் உட்பட 6 பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு மனுதாக்கல்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான பொறுப்பு வாய்ந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி பொது மக்களின் நலன் அடிப்படையில் ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் உட்பட மேலும் மூவரால் கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி அடிப்படை உரிமை மனுவொன்று (SC/FRA/212/2022) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது கடந்த ஜூலை மாதம் 1ஆம் திகதி வழக்கினை தொடர்வதற்கான அனுமதி தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த அமர்வின் போது, இரண்டு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இதுபோன்ற மற்றுமொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் (SCFR 195/2022) இரண்டு மனுக்களையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்குமாறு நீதிமன்றத்தினால் பிரதம நீதியரசருக்கு பரிந்துரைக்கப்பட்டது. பரிசீலனைக்கு பின்னர், இந்த வழக்கானது ஜூலை மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டின் தற்போதையை நிலைமைகளை கருத்திற் கொண்டு, மனுவில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணத்தினை பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு வாதங்களை தொடர அவசரத் திகதியொன்றினை வழங்குமாறு கோரி TISL நிறுவனமானது நேற்று (ஜூலை 11) நீதிமன்றத்தில் நகர்வு மனு (motion) ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரியின் முன்னாள் செயலாளர் S.R ஆட்டிகல உள்ளிட்ட 6 பிரதிவாதிகள் இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் காலப்பகுதியில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணமாக குறித்த மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நகர்வு மனுவானது எதிர்வரும் 14 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு கடனின் நிலையற்ற தன்மை, வெளிநாட்டுக் கடனை திரும்பி செலுத்துவதில் காணப்படும் சவால்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை ஆகியவற்றுக்கு குறித்த பிரதிவாதிகளே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என மனுதாரர்களான TISL நிறுவனம், சந்திர ஜயரத்ன, ஜெஹான் கனக ரட்ன மற்றும் ஜூலியன் போல்லிங் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தை அடைய காரணமான அந்த பிரதிவாதிகளின் சட்டவிரோத, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புக்கள் தொடர்பில் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என இந்த மனு கோருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *