கண்ணீர் புகைக் குண்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பில் எச்சரிக்கை!

அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பயன்படுத்தும் கண்ணீர் புகைக் குண்டுகளில் உள்ளடங்கியுள்ள இரசாயனங்கள் சுவாசக் கோளாறு, கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துவதாக இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கையின் தற்போதைய மோசமான நிலைமை குறித்து மிகவும் கவலை அடைவதாகவும் இலங்கை மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் மக்களுக்கு எதிராக சட்ட அமுலாக்க துறையினர் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்ணீர்ப்புகையில் உள்ள இரசாயனங்கள் சுவாசக் கோளாறுகள், கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

அரசாங்கத்தின் அவசர நிலை பிரகடனம் குறித்து இலங்கை மருத்துவச் சங்கம் மிகவும் கரிசனை கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையானது வன்முறையைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள கொந்தளிப்பான சூழ்நிலையை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும் மற்றும் அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் எனவும் இலங்கை மருத்துவச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்நிலையில் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, நம் நாட்டில் இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

பொதுமக்களின் குரலுக்கு செவி சாய்த்து, நமது தாய் நாட்டின் நலனுக்காக விரைவான தீர்வு நோக்கிச் செயற்படுமாறு அதிகாரத்தில் உள்ள தரப்பினரை நாம் கேட்டுக்கொள்கிறோம் எனவும் இலங்கை மருத்துவச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *