ரூ. 1000 ஐ வைத்து நாடகமாடாதீர் – தொண்டாவுக்கு முற்போக்கு கூட்டணி எச்சரிக்கை!

அரசுக்கான ஆதரவு மீள்பரிசீலனை, அமைச்சுப் பதவி துறப்பு என்றெல்லாம் அறிவிப்பு விடுத்து  அரசியல் நாடகமாடாது, தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பி வேலுகுமார்.

அரசியல் நெருக்கடியால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
‘’ ஜனாதிபதியின் சூழ்ச்சி நடவடிக்கையால் அரசியல் ரீதியில் இலங்கை அநாதையாக்கப்பட்டுள்ளது. ஒருமாதத்துக்கு மேலாக அரச நிர்வாகம் முற்றாக இயங்கவில்லை. அரசாங்கமும் அமைக்கப்படவில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவருகின்றது. சுற்றுலாத்துறைக்கு சமாந்தரமாக பெருந்தோட்டத்துறையும் அரசியல் குழுப்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வு கிடைக்காததால் தோட்டத்தொழிலாளர்களும் திண்டாடிவருகின்றனர்.
கூட்டுஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குரிய பேச்சுவார்த்தைகள் தீவிரமாக இடம்பெற்று வந்த வேளையிலேயே சூழ்ச்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கலந்துரையாடலுக்கு தலைமைத்துவம் வழங்கிவந்த தரப்பினர்  ஓடோடிச்சென்று, ‘சூழ்ச்சி அரசை’ ஆதரித்து, அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்டனர்.
இவ்வாறு பதறியடித்துக்கொண்டு பதவியை பெற்றவர்கள், மஹிந்தவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெறுவது குறித்து பரீசிலனை செய்யப்படும், பதவி துறக்கப்படும் என்றெல்லாம் தற்போது அறிவிப்பு விடுத்துவருகின்றனர். ஓடோடிச்சென்று அமைச்சுப் பதவியை பெறுவதற்கு முன்னர் இது குறித்து சிந்தித்திருக்க வேண்டும். தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கினால்தான் ஆதரவு என்ற உத்தரவாதத்தை பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு செய்திருந்தால் சமூகம் சார்பாக நாமும் பெருமை சேர்த்திருப்போம்.
இன்று உத்தியோகபூர்வமாக அரசாங்கமொன்று இல்லை. அமைச்சரவையும் சட்டரீதியாக இயங்கவில்லை. எனவே, சூழ்ச்சி அரசுக்கான ஆதரவை மீளப்பெறுவதாலோ அல்லது அமைச்சுப் பதவியை துறப்பதாலோ எதுவும் நடக்கப்போவதில்லை.  ஆகவே, அரசியல் நாடகமெல்லாம் அவசியமில்லை.
மக்கள் வழங்கிய பேரம் பேசும் சக்தியை பயன்படுத்தி தீர்வை நோக்கி பயணிக்க முயற்சிக்கவேண்டும். ரூ. ஆயிரம் விடயத்தில் ஒரு அடியேனும் பின்வாங்கமுடியாது. அந்த இலக்கை நோக்கி பணிக்க எமது ஆதரவையும் வெளியில் இருந்து வழங்க தயார்.’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *