மீண்டும் அதிகரிக்கும் கொரோனா முகக் கவசம் அணிய வலியுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளே இல்லை. தமிழக அரசு பாதுகாப்பு விதிமுறைகளை வெகுவாக தளர்த்தியுள்ளது. 2 ஆண்டுகளாக கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்ற உத்தரவு, கடந்த ஒரு மாதமாக தளர்த்தப்பட்டது. அதாவது, ‘மாஸ்க் கட்டாயம் அல்ல, ஆனாலும் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு மாஸ்க் அணிந்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும்’ என அரசு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் வேகமாக குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது பல மேலை நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல், இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தினசரி பாதிப்பு முழுமையாக குறைந்து பூஜ்ஜியத்திற்கு வரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை 4ஆக பதிவானது. அதனால் மீண்டும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியுள்ளனர்.

விமான பயணிகள் போர்டிங் பாஸ் வாங்கும் கவுன்டரில் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே போர்டிங் பாஸ் வழங்குகின்றனர். மாஸ்க் அணியாதவர்களை ஏன் அணியவில்லை என கேட்டு, மாஸ்க் அணியும்படி வற்புறுத்துகின்றனர். இதேபோல் சென்னை விமான நிலையத்தில் அனைத்து பிரிவுகளிலும் பயணிகள் மட்டுமின்றி பார்வையாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவர்களையும் மாஸ்க் அணியும்படி வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவ முக்கிய காரணம் விமான நிலையங்கள்தான். எனவே, விமான நிலையம் வரும் பயணிகள் மாஸ்க் அணிந்து வரும்படி வலியுறுத்த தொடங்கியுள்ளனர்’ என்றனர். இந்த மாஸ்க் அணியும் முறை மேலும் 2 மாதம் நீடிக்கும். மே மாத இறுதி வரை அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டியது அவசியம் இருக்கும் என்று தெரிகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *