உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் குறித்த இரகசியங்கள் வெளிவரலாம் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது!

இரகசியங்கள் வெளிவரும் என்பதாலா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தாமதமாகின்றன  என கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 3 வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் சென் செபஸ்டியான் தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகள் மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் தாமதிக்கின்றது என தெரிவித்துள்ள அவர்  அவ்வாறான நடவடிக்கையால் மேலும் பல விபரங்கள் வெளியாகலாம் என அரசாங்கம் அஞ்சுவதே அதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள இரகசியங்கள்தெரியவரலாம் என தற்போதைய அரசாங்கம் அஞ்சுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுதலை செய்துள்ளது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களிற்கும் காயப்பட்டவர்களிற்கும் செய்த அவமரியாதை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவெட்கக்கேடான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜஹ்ரானை கைதுசெய்வதற்கு முயற்சித்த பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டின் கீழ்  கைதுசெய்யப்பட்டதே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு வழிவகுத்தது- என தெரிவித்துள்ள கர்தினால் சஹ்ரானை கைதுசெய்ய முயன்ற பாதுகாப்பு அதிகாரிகளிடம் பாம்புடன் விளையாடவேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி எச்சரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *