3 மத முறைப்படி நடைபெற்ற திருமணம்!

மயிலாடுதுறையில் 3 மத முறைப்படி திருமணம் செய்த விஏஓவால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறையை சேர்ந்தவர் புருஷோத்தமன்(30). தரங்கம்பாடி அருகே சேத்தூர் விஏஓவாக உள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர் புவனேஸ்வரி(25). இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருதரப்பு பெற்றோர் முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது மும்மத முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று மணமகன் தரப்பில் பேசப்பட்டது. இதற்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

இஸ்லாமிய மற்றும் இந்து முறைப்படி திருமணம்

இதைத்தொடர்ந்து மயிலாடுறையில் உள்ள திருமண மண்டபத்தில் 26ம் தேதி(நேற்று) மாலை இஸ்லாமிய முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும், 27ம் தேதி காலை இந்து முறைப்படியும் திருமணம் நடைபெறும் என ஒரே பத்திரிகையில், மூன்று முறைப்படியான விபரங்களுடன் அச்சடித்து, உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி திருமண மண்டபத்தில் நேற்று மாலை இஸ்லாமிய முறைப்படியான ஆடை, அலங்காரத்துடன் மணமேடையில் புருஷோத்தமனுக்கும் புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மவுலானா திருமணத்தை நடத்தி வைத்து ஆசீர்வதித்தார்.

கிறிஸ்தவ முறைப்படி திருமணம்

பின்னர் கிறிஸ்தவ முறைப்படி ஆடை, அலங்காரங்கள் மாற்றப்பட்டு கிறிஸ்தவ போதகர் தலைமையில் மோதிரம் மாற்றி, திருமணம் நடந்தது. இன்று காலை அதே மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதுபற்றி மணமகன் புருஷோத்தமன் கூறுகையில், எனக்கு முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம். சாதி, சமய வேறுபாடின்றி நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு திருமணம் செய்தேன் என்றார். 3 முறைப்படி நடந்த இந்த வித்தியாசமான திருமணத்தை, விழாவுக்கு வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *