ரஷ்ய நாட்டு கப்பல் சிறைப்பிடிப்பு!

ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நடவடிக்கைகள் எடுத்துள்ளதை தொடர்ந்து, ஆங்கில கால்வாய் பயணித்த ரஷ்யாவின் Baltic Leader என்ற சரக்கு கப்பலை பிரான்ஸ் கடல் காவல்துறையினர் சிறைபிடித்துள்ளனர்.

பிரான்சின் நார்மண்டி பகுதியில் உள்ள ரூவெனில் இருந்து வாகனங்களை ஏற்றிக்கொண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்திற்கு சென்ற 416 அடி நீளம் கொண்ட Baltic Leader என்ற சரக்கு கப்பல் பிரான்ஸ் கடல் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் மீதான ரஷ்யாவின் போரை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் பலவும் பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதிதாக பிறப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை மீறி ஆங்கில கால்வாயில் சனிக்கிழமை காலை ரஷ்யாவிற்கு சொந்தமான நிறுவனத்தின் சரக்கு கப்பல் பயணித்ததாக கூறி அதனை கடல் காவல்துறையினரால் சிறைபிடித்துள்ளனர்.

மேலும் சிறைபிடிக்கப்பட்ட இந்த கப்பலை பிரான்ஸ் துறைமுகமான Boulogne-sur-Mer க்கு அதிகாலை 3 மற்றும் 4மணி அளவில் திருப்பிவிடப்பட்டு, சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து, இது குறித்து பேசிய கடல்சார் பிராந்தியத்தின் தகவல் தொடர்பு அதிகாரி கேப்டன்Véronique Magnin,ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை மீறி இந்த கப்பல் பயணித்ததாக வலுவாக சந்தேகிக்கப்பட்டதால் அதனை சிறைபிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரகம், ரஷ்ய கப்பலை சிறைபிடித்தற்கான தகுந்த விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *