உலக பொலிஸுக்கு எச்சரிக்கை விடுத்த உக்ரைன் ஆக்கிரமிப்பு!

ஆக்குவது கடினம் அழிப்பது இயல்பு என்பார்கள் அப்போது. இவையிரண்டுமே இலகுதான் இப்போது எனுமளவில்தான் நிலைமைகள் உள்ளன. விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் உயர்ச்சி மற்றும் மனித அறிவின் எழுச்சிகளால்தான் இந்நிலைமைகள் தோற்றம் பெறுகின்றன. மனித அறிவியல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், ஆக்குவதற்கு மட்டுமாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அழிக்கவும் இது வழி ஏற்படுத்தியிருக்கிறதே! இன்று அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் அறிவியல் புரட்சியால் வந்த விளைவுகள்தான். இவற்றில் சிலவற்றை இந்த வளர்ச்சிகள் காலடிக்கும் கொண்டுவந்திருக்கிறதே, இதைவிடச் சிறப்பு எது இருக்கிறது அறிவியலில்?

குடிக்கும் நீரைத்தேடி குளத்துக்குச் சென்ற காலம், குளிக்கும் நீரைத்தேடி மலைச்சாரலை நோக்கி நடந்த நேரம், விறகுதேடி விரிவெயிலில் வனம் நோக்கி விரைந்த நேரங்கள், காற்றுத்தேடியும் களைப்பு போக்கவும் ஓய்வறை, ஒதுங்குமிடம் தேடிப்போன பொழுதுகள் எல்லாம் இப்போது மலையேறிவிட்டன. இப்போது காலடியில் குடிநீர், குளிர்சாதனப்பெட்டிக்குள் குளுமையான நீர், சமயலறையில் எரிவாயு, தூங்கும் அறையில் ஏ.சியின் குளிர்காற்று, உலகையே உள்ளங்கையில் தொடர்புகொள்ள தொலைபேசி, உடனே வௌிநாடு செல்ல விமானங்கள், இன்னும் இணையங்கள் இப்படி ஏகப்பட்ட சொகுசுகளுக்கு சொந்தக்காரனாகிவிட்டான் இன்றைய மனிதன். ஆனாலும், இந்த அறிவின் வளர்ச்சியால் அழிவுக்கும் ஆளாக நேர்ந்திருப்பதுதான் நவீன உலகுக்கு ஏற்பட்டுள்ள கவலை.

ஆதிக்கப்போக்கும் அரக்க குணங்களும் இல்லாதிருந்தால் இந்த அறிவுகளை ஆக்கத்திற்கு மட்டும் பாவிக்கலாம். என்ன செய்வது? அரசாட்சியும் இருத்தலில் நிலைப்படுதலும் மனிதனை விட்டபாடில்லையே! உலகின் இரண்டு போர்கள் ஏற்படுத்திய மனித அவலங்களையடுத்து இனி, இப்படியொரு போரும் அழிவும் மானிடனுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக எத்தனை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இருந்தாலும், ஆதிக்கப்போக்கும் அரசாட்சியும் இந்த அமைப்புக்களை ஒதுக்கிவிட்டு அடுத்த போருக்குத் தயாராகிவிட்டது.

அமெரிக்காவின் அத்தனை வளர்ச்சிக்கும் நிகரான நாடு ரஷ்யா. ஐரோப்பாவின் தலையில் தொடங்கி, ஆசியாவின் காலடி வரைக்கும் பரந்து விரிந்துள்ள தேசமிது. 1990 இல் உடைந்து சிதறுவதற்கு முன்னர், அமெரிக்காவுக்கு நிகரான சக்தியாகத்தான் இது பார்க்கப்பட்டது. ஆனாலும் உடைத்துச் சிதறவைத்த அமெரிக்காவை இந்த ரஷ்யா நிம்மதியாகத் தூங்கவிட்டதுமில்லை. எல்லை விஸ்தரிப்புக்காக இந்நாடு ஆரம்பித்துள்ள உக்ரைன் படையெடுப்பு இருக்கிறதே, உண்மையில் அனைத்தும் அமெரிக்காவுக்கான அடிகள்தான்.

உக்ரைனின் எல்லையில் நேட்டோவைப் பலப்படுத்தி, ரஷ்யாவின் இன்னுமொரு துண்டை உடைக்கும் அமெரிக்காவின் திட்டத்தை ரஷ்யா அறியாமலா இருந்திருக்கும்? நேட்டோ அமைப்பிலுள்ள ரஷ்ய சார்பு நாடுகளை ஓரங்கட்டும் முயற்சிகள் எப்போது ஆரம்பமானதோ, அன்றிலிருந்து ரஷ்யாவும் உக்ரைனை ஆக்கிரமித்து பதிலடிக்குத் தயாராகியிருக்கிறது. ஏனெனில், அங்கு நுழைந்துள்ள ரஷ்யப்படைகளின் இலக்குகளில் இவை தௌிவாவதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உக்ரைன் பாதுகாப்பு அமைச்சின் இணையங்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியமை, அணுநிலையங்கள் அமைந்துள்ள சென்பைல் நகரத்தை சுற்றிவளைத்த மை, ராடர் நிலையங்களில் கண்வைத்தமை, ஐரோப்பாவுடன் நேரடியாகத் தொடர்புறும் கிழக்கு நகரங்களின் மீது சரமாரித்தாக்குதல் நடத்தப்படுதல் எல்லாம் நீண்டகாலத் திட்டங்கள்தான். தன்னைவிடவும் எவ்வளவோ சிறிய பலமுள்ள உக்ரைனை, இவ்வளவு மூர்க்கமாகத் தாக்குவதுதான் இதற்கு சான்றுகளாகின்றன.

இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ள இருதரப்புக்களும், நாட்டுக்காகவா போரிடுகின்றனர்? இந்த அறிவியலுக்குள் உட்பட்ட சாதனங்களை தூக்கியும், நகர்த்தியும், தோளிலும் சுமந்தும் தாக்குதல் நடத்தும் படையினரும், தங்களது சம்பளத்துக்காகவே இப்பணியைச் செய்கின்றனர். ஆட்சியிலிருப்போர் குளிர் அறைகளுக்குள் கோர்டும், சூட்டும் அணிந்து உத்தரவிடுகின்றனர். சம்பளத்துக்காக இயங்கும் இராணுவத்தினர் (மனிதர்கள்) தீக்கொளுந்திலும், இரத்தக்காயத்திலும், கட்டிட இடுபாடுகளுக்குள்ளும் சிக்கி உயிரும் துறக்கின்றனர், ஊனமுமடைகின்றனர். இதற்கும் மேலாக, எதிலும் சம்மந்தமுறாத உயிர்களும் காவுகொள்ளப்படுவதுதான் கவலை. தாயைப் பிள்ளை தேடுவதா? கணவனை மனைவி தேடுவதா?குற்றுயிருடன் இடிபாடுகளிலிருந்து கரையேறத் துடிக்கும் உறவைக் கரையேற்றுவதா? அறிவு ஏற்படுத்திய அவலமே இது.

வானத்தில் பறக்கும் பறவைக்கூட்டங்கள் போன்று, கிபீர் விமானங்கள் கூட்டாக பறந்து வருவது குலைநடுங்க வைக்கிறது. பெரும் மலைகள் இடிந்து விழுவதைப் போல், வானளவு உயர்ந்த கட்டிடங்கள் தீச்சுவாலைகளுடன் நொறுங்கி விழுகின்றன. விமானங்களின் தாக்குதல்களால் மேகங்களே தகர்ந்து நொறுங்குவது போன்று சத்தங்கள் கேட்கின்றன. இதுதான் உக்ரைனில் இன்று நடக்கும் யுத்தம். சுற்றுலாவுக்குப் பேர்போன நாடு உக்ரைன். கொரோனோவில் மூடி, மீளத்திறந்த நமது நாட்டுக்கு முதல் வந்ததும் உக்ரைன் பயணிகள்தான். அந்தவகையில் மட்டுமல்ல, எந்த வகையிலும் இந்த அழிவுகள் மற்றும் அவலங்களை ஏற்க முடியாது. கணப்பொழுதில் இப்படி பேரழிவைத்தரும் மனித அறிவு தேவைதானா? என்பதுதான் இன்று எழுந்துள்ள கேள்வி? எரிவாயு, எண்ணெய் வளம் இன்னும் இயற்கை வளமுள்ள ரஷ்யா இப்படியொரு ஆக்கிரமிப்பை ஏன் ஆரம்பித்தது?

(சுஐப் எம் காசிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *