பெப்ரவரி 14 முதல் தனிமைப்படுத்தலில் இருந்து தளர்வு!

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட 82 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், பெப். 14 ஆம் திகதி முதல் கட்டாயத் தனிமையில் வைக்கப்பட மாட்டாா்கள்.

இதுதொடா்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. புதிய நெறிமுறைகளை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 7 நாள்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும். 8 ஆவது நாள் கொரோனா பரிசோதனை எடுத்து, அதை ‘ஏா் சுவிதா’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது.

புதிய வழிகாட்டுதலின்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் கட்டாய தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக தங்கள் உடல்நிலையை அடுத்த 14 நாள்களுக்கு கண்காணிக்க வேண்டும்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதுதவிர, இந்தியாவுக்கு வரும் பயணிகள், பயணத்துக்கு முன்பாக கடந்த 14 நாள்களில் மேற்கொண்ட பயண விவரங்களை ஏா் சுவிதா வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள வெளிநாடுகளில் இருந்து வருவோா் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுத்த கரோனா பரிசோதனை சான்றிதழைத் தாக்கல் செய்ய வேண்டும். அதனுடன் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமில்லை.

அவுஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், மாலைத்தீவுகள், நியூஸிலாந்து, நெதா்லாந்து, கத்தாா், சிங்கப்பூா், ஸ்விட்சா்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, சவூதி அரேபியா, இஸ்ரேல், வங்கதேசம், ஈரான், நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட 82 நாடுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சீனா, ஐக்கிய அரபு அமீரகம் அந்தப் பட்டியலில் இல்லை.

வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் 2 சதவீத பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்பிறகு அவா்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா். ஒருவேளை அவா்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால் அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

கடல் வழியாக இந்தியாவுக்கு வருபவா்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். 5 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு பயணத்துக்கு முன்பும், பயணத்துக்கும் பிறகுமான பரிசோதனையில் விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் சுய கண்காணிப்பு காலத்தில் அவா்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *