வேலையின்மையால் 3 ஆண்டுகளில் 25,000 பேர் தற்கொலை!

கொரோனா பரவிய கடந்த 2020ம் ஆண்டில், நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய அளவில் பொது முடக்கத்தை அறிவித்தது.

இதனால் ஏராளமான தொழில்கள் முடங்கின. வேலையில்லாமல், வெளிமாநில தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

கொரோனாவுக்கு பிறகு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை.

மத்திய அரசிடம் இருந்த எந்த சலுகைகளும் கிடைக்காததால் ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக பலர் வேலை இழந்தனர்.

ஜிஎஸ்டி போன்ற பல்வேறு விஷயங்களில் ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றன.

தற்போது நடந்து வரும் பட்ஜெட் தொடரில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,

வேலையில்லா திண்டாட்டத்தைத் தடுக்க மத்திய அரசு எந்தவொரு திட்டத்தையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இது பற்றி குடியரசுத் தலைவர் உரையில் ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லையில் ஏற்பட்ட தற்கொலைகள், அதை தடுக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்துள்ள பதிலில், கொரோனா காலகட்டத்தில் கடன் தொல்லையில் நாடு முழுவதும் 16,000 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் அடிப்படையில், அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், “கடந்த 2018 முதல் 2020க்கு இடையில் வேலையின்மை, திவால் அல்லது கடன் காரணமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில், கடன் தொல்லையால் மட்டும் 16 ஆயிரத்து 91 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேலையில்லாத காரணத்தால் 9,140 பேர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.

கடன் மற்றும் திவால் காரணமாக 2020ம் ஆண்டில் 5,213 பேரும், 2019ல் 5,908 பேரும், 2018ல் 4,970 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வேலையில்லாத காரணத்தால் 2018ல் 2,741 பேரும், 2019ல் 2,851 பேரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த எண்ணிக்கை, கொரோனா பரவிய 2020ம் ஆண்டில் 3,548 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.

இதன் மூலம், நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் தீவிரமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், ‘‘அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டப் பிரச்னையைச் சமாளிக்க, மனநலத்தில் கவனம் செலுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அரசு விரும்புகிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *