ஒமிக்ரோன் தொற்றின் அறிகுறிகள்!

கொரோனா தொற்றுநோயின் புதிய திரிபான ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. எனவே மக்கள் எந்த நோய் அறிகுறிகளில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று பார்ப்போம்.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, சில அறிகுறிகள் ஏற்படும்போது மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. அவை:

தொடர்ச்சியான இருமல்
காய்ச்சல் அல்லது அதிக உடல் வெப்பநிலை
வாசனை அல்லது சுவையை இழத்தல் அல்லது மாறுபடுதல்

ஆனால் கோவிட் பாதிப்பு இருக்கும் சிலருக்கு, “மோசமான சளி இருப்பதைப் போல்,” தலைவலி, தொண்டைப் புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஸோயி கோவிட் ஆய்வு (ZOE COVID APP) என்ற செயலியில், லட்சக்கணக்கான மக்களிடம் அவர்களுடைய அறிகுறிகளைப் பதிவு செய்யும்படி கேட்டு, ஆதிக்கம் செலுத்தும் டெல்டா திரிபு மற்றும் தற்போது அதிகமாகப் பரவக்கூடிய புதிய திரிபான ஒமிக்ரான் ஆகிய இரண்டிலும் உள்ள அறிகுறிகளை புலனாய்வாளர்கள் பார்த்து வருகின்றனர்.

இதுவரையிலான, முதல் ஐந்து அறிகுறிகள்:

மூக்கு ஒழுகுதல்
தலைவலி
லேசான அல்லது கடுமையான சோர்வு
தும்மல்
தொண்டை வலி

உங்களுக்கு கோவிட் இருக்கலாம் என்று நினைத்தீர்களானால், பரிசோதனை செய்துகொள்வது அவசியம். உடல்நிலையில் பெரியளவுக்குப் பிரச்சனை இல்லாமல் இருப்பவர்கள் கூட, மற்றவர்களை அபாயத்தில் தள்ளலாம்.

காய்ச்சல் என்றால், 37.8C அல்லது அதற்கும் மேல் உடல் வெப்பநிலை இருக்கும். கொரோனா வைரஸ் மட்டுமின்றி, எந்தவொரு தொற்றுநோயையும் எதிர்த்து உடல் போராடும்போது இதுபோன்ற காய்ச்சல் ஏற்படும்.

உடல் வெப்பநிலையை அளக்க தெர்மாமீட்டரை பயன்படுத்துவது சிறந்தது. ஆனால், உங்களிடம் தெர்மாமீட்டர் இல்லையெனில், உங்களுக்கோ அல்லது உங்கள் பராமரிப்பில் இருக்கும் நபருக்கோ மார்பு அல்லது முதுகில் தொடும்போது சூடாக இருக்கிறதா என பார்க்கவும்.

சளியோடு அதிக வெப்பநிலை பெரும்பாலும் சாத்தியமில்லை.

உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். கொரோனா சேவைக்கான இணைய சேவையையும் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு சளி அல்லது காய்ச்சல் இருந்தால் மற்ற அறிகுறிகளோடு இருமலும் இருக்கலாம்.

காய்ச்சல் பொதுவாக திடீரென வரும். அதோடு பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி தசை வலி, குளிர், தலைவலி, சோர்வு, தொண்டை புண் மற்றும் சளி அல்லது மூக்கில் அடைப்பு போன்றவற்றையும் அனுபவிப்பார்கள். இது கடுமையான சளிப் பிரச்சனையை விட மோசமாக இருக்கும்.

சளி படிப்படியாக அதிகரிக்கும், மிகவும் கடுமையாக இருக்காது. இருப்பினும், அதனால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும். இருமலுடன் சேர்ந்து, தும்மல், தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை இருக்கலாம். காய்ச்சல், சளி, தசை வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் அரிதானவை.

சி.ஓ.பி.டி (COPD) போன்ற நீண்டகால மருத்துவ நிலை காரணமாக உங்களுக்கு வழக்கமாக இருமல் ஏற்படும் என்றால், அது வழக்கத்தைவிட மோசமாக இருக்கலாம்.

உங்களுக்கு தொடர் இருமல் இருந்தால், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இவை கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகள். இவை இருந்தால் நீங்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அது சாதாரண சளியாகக்கூட இருக்கலாம். ஆனாலும் நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், வைரஸ் பரவும் அபாயத்தைத் தவிர்க்க பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தும்மல் என்பது கொரோனாவின் குறிப்பிடத்தக்க அறிகுறி அல்ல. மேலும், உங்களுக்கு காய்ச்சல், இருமல், வாசனை அல்லது சுவையை இழப்பது ஆகியவை இல்லாவிட்டால், உங்களுக்கு சோதனை தேவையில்லை.

தும்மலில் வெளியாகும் நீர்த்துளிகள் தொற்றுகளைப் பரப்பலாம். எனவே, அவற்றை டிஷ்யூ பயன்படுத்தி, குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கைகளைக் கழுவிக்கொள்ளவும்.

கொரோனா வைரஸ் மற்றும் பிற நோய்கள் பரவுவதைத் தடுக்க:

உங்கள் கைகளை தவறாமல் கழுவவும்

சமூக இடைவெளி சாத்தியமில்லாத போது முகமூடியைப் பயன்படுத்துங்கள்

உங்கள் வீட்டில் இல்லாதவர்களிடம் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முயலுங்கள்

மூக்கு ஒழுகுதல் அல்லது தலைவலி ஆகியவை இருந்தால் தற்போது கோவிட் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதில்லை என தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

ஆனால், கோவிட் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வரும் சிலருக்கு இந்த அறிகுறிகள் இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

பின்வரும் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கோவிட் இருக்கலாம் என அமெரிக்க வழிகாட்டுதல்கள் கூறுகின்றன:

காய்ச்சல் அல்லது சளி
இருமல்
மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்
சோர்வு
தசை வலி அல்லது உடல் வலி
தலைவலி
சுவை அல்லது வாசனையை இழப்பது
தொண்டை வலி
மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்
குமட்டல் அல்லது வாந்தி
வயிற்றுப்போக்கு

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசானது முதல் கடுமையானது வரை பலவிதமான அறிகுறிகள் இருக்கலாம். சிலருக்கு எந்த அறிகுறியுமே இல்லையென்றாலும் தொற்றுநோய் பாதிப்பு இருக்கலாம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பொதுவாக ஐந்தாவது நாளில் இருந்து இரண்டு வாரங்கள் வரை அறிகுறிகள் தோன்றலாம்.

மூச்சுத்திணறல் உணர்வு மிகவும் தீவிரமான கொரோனா தொற்று பாதிப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம்.

சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், மருத்துவரையோ அல்லது ஆம்புலன்ஸ் உதவியையோ உடனடியாக நாடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *