ஒமிக்ரான் வைரஸ் HIV பாதிப்புடன் உருமாற்றம் அடைந்திருக்க அதிக வாய்ப்பு!

பயங்கரமான ஒமிக்ரான் வைரசிடமிருந்து தடுப்பூசிகள் நம்மை பாதுகாக்குமா? இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்ததன் பின்னணி என்ன? என்பது குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் அதிதீவிரமாக பரவக்கூடிய வைரஸ் மீண்டும் உலக நாடுகளை கொரோனா அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே அதன் மரபணு வரிசையை வகைப்படுத்தும் வேலையை உலகின் பல நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்த மரபணு வகைப்படுத்துதலை வைத்து தான் வைரசின் உருமாற்றம் அடையாளம் காணப்படுகிறது.

அந்த வகையில், உலகிலேயே மரபணு வகைப்படுத்துவதில் மேம்பட்ட கட்டமைப்பை கொண்டிருக்கும் நாடுகள் இங்கிலாந்தும், தென் ஆப்ரிக்காவும்தான். இவைதான் கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தை பிரித்து ஆய்வு செய்யும் பரிசோதனையை முதன் முதலில் தொடங்கின. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலயே தென் ஆப்ரிக்காவில் தேசிய அளவிலான கொரோனா வைரஸ் மரபணு வகைப்படுத்தும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. தென் ஆப்ரிக்காவில் தனியார் ஆய்வகங்கள் தேசிய சுகாதார ஆய்வக மையத்துடன் இணைக்கப்பட்டன. அங்கு ஏராளமான ஆய்வகங்களில் மரபணு வகைப்பாடுகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

இதன் காரணமாகத்தான், 77 மாதிரிகளில் ஒமிக்ரான் வகையை சேர்ந்த படுபயங்கரமான மரபணு மாற்றங்களுடன் கூடிய வைரஸ் இருப்பதை தென் ஆப்ரிக்கா மிக விரைவாக கண்டறிந்துள்ளது. ஆனாலும், அதற்குள் இந்த வைரஸ் தென் ஆப்ரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு சென்றவர்கள் மூலம் இஸ்ரேல், ஹாங்காங், செக் குடியரசு போன்ற நாடுகளுக்கு பரவி இருக்கிறது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டதன் மூலம் உலக நாடுகள் உஷாராகி இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் இன்னொரு பேரழிவை சந்திக்கலாம் தவிர்க்கலாம் என நம்புகின்றன.

இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்தது குறித்து தென் ஆப்ரிக்காவின் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகையில், ‘உடலில் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பை கொண்டவர்கள் அல்லது வைரசை அழிக்க முடியாமல் நீண்ட காலம் தொற்றுநோயை அனுபவிப்பவர்கள் மூலமாகவே புதிய வைரஸ் மாறுபாடுகள் பெரும்பாலும் உருவாகும். அதாவது, வைரசை அகற்றும் அளவுக்கு வலுவாக இல்லாத நோய் எதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களின் உடல் இயற்கையாக அந்த வைரசை அகற்ற அதிக அழுத்தத்தை செலுத்துகிறது. இதன் மூலம், வைரஸ் கட்டாயப்படுத்தப்படுகிறது.

அதன் மூலம், புதிய மாறுபாடுகள் தோன்றுகின்றன. அந்த வகையில், எச்ஐவி பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் மூலமாக ஒமிக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்திருக்க அதிக வாய்ப்புள்ளது,’ என்கின்றனர். ஒமிக்ரான் மிக வேகமாக பரவுமா, அதிக  உயிர் பலியை ஏற்படுத்தக் கூடியதா என்பதை அறிய இன்னும் அதிகப்படியான  ஆய்வுகளும், காலமும் தேவை என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால், இந்த உருமாற்ற  கொரோனா வைரசால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று,  இங்கிலாந்து அரசின் அவசர கால அறிவியல் ஆலோசனை குழுவை சேர்ந்த வைரஸ்  நிபுணரான காலும் செம்பிள் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் நேற்றிரவு  நிலவரப்படி, ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக  கண்டறியப்பட்டு உள்ளது.

  • பெயர் வைக்க கூட தயக்கம் சீனாவை பார்த்து பயமா?
    கொரோனா வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் கிரேக்க மொழி அகரவரிசைப் படி பெயரிட்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக கண்டறியப்பட்ட உருமாற்ற வைரசுக்கு ‘மு’ என பெயரிப்பட்டது. அதற்கு அடுத்த கிரேக்க உயிரெழுத்து ‘நு’ என்பதாகும். ஆனால், ஆங்கிலத்தில் ‘Nu New variant’ (நு புதிய வகை) என உச்சரிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் ‘நு’ எழுத்து தவிர்க்கப்பட்டது. அதற்கு அடுத்த எழுத்து ‘ஜி’ (Xi). ஆனால் இந்த எழுத்தையும் உலக சுகாதார நிறுவனம் தவிர்த்துள்ளது. அதற்கான காரணம் கூறப்படவில்லை. அதற்கு அடுத்த ஒமிக்ரான் பெயரை சூட்டி உள்ளது. இதற்கிடையே, சீன அதிபர் ஜின்பிங்கின் முதல் பெயர் ஜி என வருவதால் அந்த எழுத்தை உலக சுகாதார நிறுவனம் தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவை பார்த்து உலக சுகாதார நிறுவனம் பயப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் பலர் கிண்டல் செய்கின்றனர்.
  • இந்திய தடுப்பூசிகள் பலன் தருமா?
    ஒருவேளை இந்த வைரஸ் இந்தியாவில் பரவினால் இந்திய தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிக்குமா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, கூறுகையில், ‘‘கொரோனாவுக்கு எதிரான எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் ஓமிக்ரானுக்கு எதிராக செயல்படாது. எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் ஸ்பைக் புரதம் மற்றும் ஏற்பி தொடர்புகளை நோக்கி இயக்கப்படுகின்றன. எனவே, இந்திய தடுப்பூசிகள் இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும்,’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *