மிரட்டும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இலங்கைக்கு எச்சரிக்கை விடுப்பு!

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதைத் தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் (AMS) தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

“B.1.1.529 என அழைக்கப்படும் புதிய மாறுபாடு, தடுப்பூசிகளால் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் ஆற்றலைக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா போன்ற நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்தவர்களை உடனடியாக கண்காணிக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிந்தால் அத்தகைய நபர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தென்னாபிரிக்க பிராந்தியத்தில் இருந்து வான் மற்றும் கடல் மார்க்கமாக வருபவர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்த எல்லைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

தென்னாபிரிக்கப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டிற்குள் பிரவேசித்தால், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் மாதிரிகளைச் சேகரித்து அவற்றைப் பரிசோதிக்கும் பொறிமுறைமை இருக்க வேண்டும்.

அவ்வாறான நபர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைமை தொடர்பில் பேராசிரியர் நீலிகா மாளவிகே, பேராசிரியர் மலிக் பீரிஸ் மற்றும் கலாநிதி சந்திம ஜீவந்தர போன்ற பாட நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“இந்த புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட வேறு எந்த மாறுபாட்டையும் விட வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பும் இந்த விஷயத்தில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

எனவே, இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கலந்தாலோசிக்க வேண்டுமே தவிற அரசியல்வாதிகளிடம் அல்ல.

உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் நாம் செயல்படத் தவறினால், கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும். தற்போது மீண்டு வரும் நாட்டின் பொருளாதாரத்தை இது நேரடியாக பாதிக்கும்” என அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *