கனடாவில் அவசரகால நிலை பிரகடனம்!

கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொட்டிய பேய் மழையால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

வான்கூவர் நகரைக் கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்தப் புயலைத் தொடர்ந்து அங்கு பேய் மழை கொட்டத் தொடங்கியதாகவும், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், பசிபிக் கடற்கரை மாகாணத்தில் சுமார் 18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார்.

பெருமழை மற்றும் மண்சரிவுகளால் அங்கு தற்போது வரை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவரை காணவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வரவிருக்கும் நாட்களில் இன்னும் கூடுதலான உயிரிழப்புகளை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். நாங்கள் பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவோம், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவ மற்றும் அவசர சேவைகள் தேவைப்படும் சமூகங்களைச் சென்றடைய முடியும் என்பதை உறுதி செய்வோம்’ என கூறியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) அவசரக்கால நிலையைப் பிரகடனப்படுத்திய மத்திய அரசாங்கம் அங்கு உதவிப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

மண் சரிவால் முக்கிய சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வாகனங்களில் பயணம் செய்யும் வான்கூவர் செல்லவேண்டியவர்கள் மற்றும் வான்கூவரிலிருந்து பயணம் செய்பவர்கள், தெற்கு நோக்கிப் பயணித்து, அமெரிக்காவுக்குச் சென்று கனடாவுக்குத் திரும்பி வரவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் ரயில் பாதைகளும் மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வான்கூவரிலிருந்தும், வான்கூவருக்கும் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *