ACMC எம்பிக்களே தலைமைக்கும்,கட்சிக்கும் வில்லனாக உள்ளனர்!

ஏதாவது சலுகைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தினையும் காட்டிக் கொடுத்து ஜனாசாக்கள் எரிப்பதை அழகு பார்த்து காப்பாற்ற முடியாத அரசியல் இந்த சமூகத்திற்குத் தேவையா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி(M. S. S. Ameer Ali) தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதுர்தீன்(Rishad Bathiudeen) ஆறு மாத கால சிறைப்படுத்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து வரும் நிலையில் ஓட்டமாவடியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியில் இல்லத்தில் நேற்றைய தினம் மக்கள் சந்திப்பு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுபான்மை மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றான், சண்டை பிடிக்கின்றான் என்பதற்காக, குரலை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக எடுத்துக் கொண்ட முனைப்பே றிஷாத் பதுயுதீன் கைதும், அவருடைய மனைவி, மாமனார், மைத்துனர் ஆகியோரையும் அழைத்து சென்றனர். நல்லகாலம் அவருடைய பிள்ளைகள் சின்ன பிள்ளைகள் இல்லாவிடின் அவர்களையும் அழைத்துச் சென்றிருப்பார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகக் கொண்டு வந்து நாடாளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தோம். தற்போது அவர்களே தலைமைக்கும், கட்சிக்கும் வில்லனாக செயற்படுகின்ற ஒரு காலகட்டத்தினை நாங்கள் கண்டோம். இவர்கள் அருவருப்பாக நடந்து கொண்டார்கள்.

எங்களிடத்தில் ஒரு கதை, அரசியல் தலைவர்களிடத்தில் ஒரு காட்டிக் கொடுப்பு செய்தார்கள். நாங்களும் நீங்கள் மேற்கொண்ட பிரார்த்தனை மூலமே றிஷாத் பதுர்தீனை உயிரோடு பார்க்கக் கிடைத்தது.

சஹ்ரானின் குண்டு வெடிப்பில் 250மேல் உயிர்களைக் காவு கொண்டு இந்த அரசாங்கத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக 350 மேற்பட்ட ஜனாசாக்களை எரித்து அழகு பார்த்து எமது ஒட்டு மொத்த சமூகத்தையும் சீர்குலைத்து சின்னா பின்னமாக்க வேண்டும் என்கின்ற நிலவரத்திலிருந்த பொழுதும் கூட எங்களுடைய உறுப்பினர்கள் அவர்களுக்குக் கூஜா தூக்கிய நிகழ்வை முஸ்லிம் சமூகம் இலகுவில் மறந்துவிடக் கூடாது.

தேசியத்திலே முஸ்லிம் அரசியல் நாறிப்போய்க் கிடக்கின்றது. இந்த நாறிப்போய்க் கிடக்கின்ற அரசியல் சரிவந்து விடும் என்று நினைத்து விடாதீர்கள். இவ்வாறு காவு கொடுப்பவர்கள், தனிப்பட்ட முறையில் ஏதாவது சலுகைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தினையும் காட்டிக் கொடுத்து, ஜனாசாக்கள் எரிப்பதை அழகு பார்த்துக் காப்பாற்ற முடியாத அரசியல் இந்த சமூகத்திற்குத் தேவையாக என்று நான் கேட்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதுர்தீன், முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், முன்னாள் தவிசாளர்களான ஐ.ரி.அஸ்மி, கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் எம்.அமீர், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் கல்முனை நகரசபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.றிபாஸ், கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேச ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *