கொழும்பில் குண்டு வைக்க பயிற்சி வழங்கிய முன்னாள் போராளி? விசாரணையில் தகவல்

அண்மையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை – உப்புவெளி பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், வெடிகுண்டை கொடுத்த நபர் தனக்கு எப்படி வெடிகுண்டை வைப்பது குறித்து ஆறு நாட்கள் பயிற்சி அளித்ததாகவும் கூறியுள்ளார்.

கடந்த 14ம் திகதி நாரஹேன்பிட்ட பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் வைத்தியசாலையின் கழிவறையில் கைக்குண்டு மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முதல் சந்தேகநபர், பொலிஸாருக்கு தகவல் வழங்கி பரிசு பெறும் நோக்கத்தில் தான் கையெறி குண்டை வைத்தியசாலையில் வைத்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
மேலும், கொழும்பில் விஜேராம மாவத்தையில் உள்ள முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் இருந்து குண்டை பெற்றுக்கொண்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அரச புலனாய்வு சேவை மற்றும் கொழும்பு குற்றப் பிரிவினர் முக்கிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி,வறுமையால் பாதிக்கப்பட்ட சந்தேக நபரின் பணத் தேவையைப் பயன்படுத்தி மற்றொரு நபர் வெடிகுண்டை வெடிக்க வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. முதல் சந்தேக நபருக்கு கைக்குண்டு கொடுத்ததாக கூறப்படும் ஒருவரை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதன் படி, குறித்த நபரை நேற்று கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். திருகோணமலை – உப்புவெளி பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 40 வயதான புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முதல் சந்தேகநபர், தனக்கு கைக்குண்டு கொடுக்கப்பட்டு, உப்புவெளியில் உள்ள ஒரு இந்து கோவிலுக்குப் பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், கையெறி குண்டுகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

இந்த பயிற்சி ஆறு நாட்கள் நடத்தப்பட்டதாகவும், அவர் துப்பாக்கிகளின் புகைப்படங்களைக் காட்டியதாகவும் அது பற்றிய பல தகவல்களைத் தந்ததாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், நேற்று கைது செய்யப்பட்ட நபரால் கைக்குண்டு முக்கிய சந்தேக நபருக்கு வழங்கப்பட்டதா அல்லது முன்னர் கூறியது போல் சந்தேகநபர் அரசியல்வாதி ஒருவரின் வீட்டிலிருந்து குண்டைப் பெற்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *