கள்ளக் காதலியுடன் வாழ்வதற்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே உள்ள புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(30). ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா(24). இவர்களுக்கு வர்ஷினி(3) என்ற மகள் உள்ளார். கடந்த மாதம் 25ம்தேதி சத்தியமூர்த்தி, கோயிலுக்கு செல்லலாம் எனக்கூறி திவ்யாவை அழைத்து சென்று அவருக்கு மயக்க மாத்திரை கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளார். அவர் மயங்கி விழுந்ததும், அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு குழந்தையுடன் காரில் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி திவ்யா இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து சத்தியமூர்த்தியை தேடினர். இந்நிலையில் சத்தியமூர்த்தி தஞ்சாவூரில் குழந்தை மற்றும் கள்ளக்காதலியுடன் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தஞ்சாவூர் சென்று சத்தியமூர்த்தியை கைது செய்தனர். அவரை திருப்பத்தூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சத்தியமூர்த்தி போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:

திவ்யாவின் உறவினர் பெண்ணான சென்னையில் நர்சிங் படிக்கும் அர்ச்சனாவுக்கு, எனது பெண் குழந்தையின் மீது அதிக பாசம் இருந்தது. இதனால் அவர் மீது எனக்கும் காதல் ஏற்பட்டது. இதையறிந்த திவ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நான் திவ்யாவை பிரிந்து சென்றுவிட்டேன். சில மாதங்களுக்கு பின் மீண்டும் திவ்யாவிடம் சென்று, அர்ச்சனாவை மறந்துவிட்டேன். இனிமேல் உன்னுடன்தான் வாழ்வேன் எனக்கூறினேன். இதை நம்பிய திவ்யா, என்னை ஏற்றுக்கொண்டார். சம்பவத்திற்கு முந்தைய நாள் கோயிலுக்கு சென்று வரலாம் எனக்கூறி திவ்யா மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு எலவம்பட்டி அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றேன். அங்கு திவ்யாவிற்கு தெரியாமல் மயக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்தேன். இதை குடித்த திவ்யா மயங்கி விழுந்தார். உடனே  பெட்ரோலை எடுத்துவந்து, திவ்யாவின் உடல் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு குழந்தையுடன் சென்னைக்கு சென்றுவிட்டேன்.

அங்கு அர்ச்சனாவிடம், ‘திவ்யாவை பிரிந்து வந்துவிட்டேன். வெளியூர் சென்று ஒன்றாக வாழலாம்’ எனக்கூறினேன். அதன்படி அச்சனாவை அழைத்துக்கொண்டு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தேன். பழனிக்கு சென்று நானும், எனது குழந்தையும் மொட்டை அடித்துக்கொண்டோம். பின்னர் 3பேரும் தஞ்சாவூர் சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். இருப்பினும் போலீசார் எங்களை பிடித்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், சத்தியமூர்த்தியை நேற்றிரவு திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அர்ச்சனாவையும், குழந்தையையும் திருப்பத்தூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *