சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

தமிழகத்தை உலுக்கிய சுவாதி படுகொலை தொடர்பில் கைதான ராம்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தாக்கி ராம்குமார் உயிரிழக்கவில்லை என்று தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பல திருப்பங்களையும் முரண்களையும் கொண்ட வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்கள் ஒட்டு மொத்த கதையையும் புரட்டிப்போட்டுள்ளது. ராம்குமார் வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆஜரான மருத்துவர் வேணு ஆனந்தும், மருத்துவர் ஆண்டாளும் கொடுத்த வாக்குமூலம், வழக்கு முடிக்கப்பட்ட விதத்தை அசைத்துப் பார்த்துள்ளது.

மூளை, இதயம், நுரையீரல், நாக்கு, கல்லீரல், மண்ணீரல், மேல் உதடு, கீழ் உதடு, சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் திசுக்களை ஹிஸ்டோபேத்தாலஜி நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த ஆய்வின் இறுதியில், ராம்குமாரின் திசுக்களை ஆய்வு செய்ததில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என ஹிஸ்டோபேத்தாலஜி (Histopathology) நிபுணர்கள் உண்மையை போட்டுடைத்துள்ளனர்.

வழக்கமாக மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார் என்றால், அவரது மூளை, இதயம் ஆகிய உறுப்புகளின் திசுக்களில் பாதிப்பு பதிவாகியிருக்கும். ஆனால், ராம்குமாரின் திசுக்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அப்படி எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை தடயவியல் ஆய்வின் இறுதியில் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் ராம்குமாரின் மரணத்தில் இன்னோர் திருப்பம் உடலில் இருந்த காயங்கள். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களில் 12 காயங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கிறார்கள் மூத்த தடயவியல் நிபுணர் சம்பத்குமார்.

ராம்குமார் மரண நாளன்று, உடலை முதலில் பெற்றுக்கொண்ட மருத்துவர் அப்துல் காதர் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இறந்த நேரத்தில் முரண்பாடு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. சிறையில் ராம்குமார் உயிரிழந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட நீதிவிசாரணையிலும் திருப்தி இல்லை என்கிறார் வழக்கறிஞர் ராம்ராஜ்.

எனவே சிறப்புக்குழு அமைத்து, ராம்குமார் மரண வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மூத்த தடயவியல் நிபுணர் சம்பத்குமார் கூறிய நிலையில், தமது மகனது மரணம் தொடர்பில் மறு விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என ராம்குமாரின் பெற்றோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *