ஊழியருக்கு முத்தம் கொடுத்த சர்ச்சையால் பிரித்தானிய சுகாதார செயலாளர் பதவி விலகல்!

தனது சக ஊழியரை முத்தமிட்டதன் ஊடாக சமூக இடைவெளியை மீறிய காரணத்தால் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில், அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது சக ஊழியர்களில் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி இருந்தது.

இந்த காணொளி வெளியானதன் பின்னர் சுகாதார செயலாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவர் இவ்வாறு பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் மூலம் நாட்டின் உயர்மட்ட சுகாதார அதிகாரி பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்டிநிற்பதாக பலர் குற்றம் சாட்டி இருந்தனர்.

சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது முக்கிய சகாக்களில் ஒருவரான Gina Coladangelo உடன் நெருக்கமாக இருக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்திற்கு பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, உடனடியாக சுகாதார செயலாளரை பதவி நீக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

பிரித்தானியா மக்கள் சமூக ரீதியாக இடைவெளியை பேணி, முகமூடி அணிந்து, கடுமையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் நேரத்தில் சுகாதார செயலாளரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார செயலாளர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தின் மூலம் தான் பிரித்தானிய மக்களை அவமானப்படுத்தியதாகவும், அந்த சம்பவத்தின் மூலம் சமூக இடைவெளியை மீறியதாகவும் சுகாதார செயலாளர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *