நாட்டை முழுமையாக திறப்பது ஆபத்தானது வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் 75 வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாகத் திறப்பது அச்சுறுத்தலானது. நாட்டைத் திறந்துவிட்டு தடுப்பூசி ஏற்றலாம் எனக் கருதினால் மோசமான வைரஸ் பரவல் நிலை உருவாகும்.

இவ்வாறு சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு திறக்கப்பட்டாலும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இன்னமும் நாடு சிவப்பு எச்சரிக்கையில் இருந்து விடுபடவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

“நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலத்திலும் மக்களின் செயற்பாடுகள் முழுமையாகத் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்ற பொதுவான விமர்சனம் உள்ளது.

அதேபோல், பொதுப் போக்குவரத்தை மிகக் கவனமாக கையாள வேண்டியுள்ளது. பஸ்களில், ரயில்களில் 50 வீதமான பொதுமக்களுக்கே இடமளிக்க வேண்டும். நாட்டில் தற்போதும் டெல்டா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை நீங்கவில்லை.

நாடு முழுவதும் டெல்டா வைரஸ் பரவியுள்ள நிலையில் நாட்டில் 75 வீதமானோருக்கேனும் தடுப்பூசி ஏற்றாது நாட்டை மீளத் திறப்பது அச்சுறுத்தலான நிலைமையாகும்.

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நிறைவடையாது நாட்டைத் திறந்து வைரஸ் பரவலுக்கு மீண்டும் இடமளித்தால் மிக மோசமான தாக்கம் உருவாகும். எப்போதுமே நாம் ஏனைய நாடுகளை உதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் கொவிட் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், அச்சுறுத்தல் நிலையை நாம் கடக்கவில்லை. சிவப்பு எச்சரிக்கை நிலை குறைவடைந்துள்ளதே தவிர, எச்சரிக்கை நிலையில் இருந்து நாம் இன்னமும் விடுபடவில்லை” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *