கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. இந்தத் திரைப்படத்தை லவ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்திய அணிக்கு 10 ஆண்டுகள் கேப்டனாக இருந்த கங்குலியின் பொற்காலம் என்று கூறலாம். தோனி உள்பட பல இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தவர் கங்குலிதான். ரசிகர்களால் கொல்கத்தாவின் இளவரசர், தாதா என்று அழைகக்படும் கங்குலியை, ராகுல் திராவிட் “ காட் ஆஃப் ஆஃப்சைட்” என்று அழைப்பார். கங்குலி ஆஃப் சைடில் ஷாட்களை அடிக்கும் அழகே தனி.

களத்தில் இறங்கிவிட்டால் வெற்றிக்காக கடைசிவரை போராடும் இயல்புடைய கங்குலியின் பேட்டிங்கும், கேப்டன்ஷிப் திறமையும் புகழப்பட வேண்டியவை. எந்த எதிரணியையும் எளிதாக இந்திய அணியை எடுத்துக்கொள்ள முடியாத வகையில் கேப்டன்ஷிப்பும், பேட்டிங்கும் கங்குலியிடம் தனித்தன்மை வாய்ந்தது.
கடந்த 1996-ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் கங்குலி. 2-வது டெஸ்ட்டிலும் சதம் அடித்து அனைவரையும் கங்குலி வியப்புக்குள்ளாக்கினார். 1997-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4 முறை ஆட்ட நாயகன் விருதை கங்குலி வென்றுள்ளார்.

2000-ம் ஆண்டில் இந்திய அணிக்குள் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தவுடன் கங்குலி கேப்டன்ஷிப் பொறுப்பேற்றார். மிகவும் நெருக்கடியான நேரத்தில் இந்திய அணிக்குத் தலைமை ஏற்று வழிநடத்தினார்.

கங்குலி தலைமையில்தான் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், முகமது கைஃப், தோனி, ஆஷிஸ் நெஹ்ரா, ஜாகீர்கான் போன்ற ஜாம்பவான்கள் அடையாளம் காணப்பட்டனர். 2000-ம் ஆண்டில் நடந்த நாக் அவுட் டிராபி போட்டியில் முதன்முதலாக இந்திய அணியை ஃபைனல் வரை கொண்டு சென்றது கங்குலியின் தலைமைதான்.

ஆஸ்திரேலிய அணியையும் சொந்த மண்ணில் வைத்து 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது கங்குலி தலைமைதான்.
இதுவரை 113 டெஸ்ட், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி, ஒட்டுமொத்தமாக 18,575 ரன்கள் சேர்த்துள்ளார். இந்திய அணிக்கு 195 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த கங்குலி அதில் 97 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகப் போகிறது என்பது குறித்து கங்குலி ட்விட்டரில்பதிவிட்ட கருத்தில், “என்னுடைய வாழ்க்கை, நம்பிக்கை, முன்னோக்கி நகர்வதற்கான தன்னம்பிக்கையை அளித்தது கிரிக்கெட்தான். அந்தப் பயணம் அழகானது. என்னுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக லவ் பிலிம்ஸ் எடுப்பது த்ரில்லானது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *