8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகளை வென்றது இங்கிலாந்து!

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையேயான 19ஆவது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களமிறங்கினர். இதில் இவின் லீவிஸ் 2 ஆட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். சிறிது நிலைத்து ஆடிய மற்றொரு தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 36 ஓட்டங்களில் ஆட்டமிழக்க , அவரைத் தொடர்ந்து ஷாய் ஹோப் 11 ஓட்டங்களில் வெளியேறினார்.

அதன் பின் களமிறங்கிய நிகோலஸ் பூரன் மற்றும் ஹெட்மயர் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இதில் ஓரளவு ஓட்டங்கள் சேர்த்த ஹெட்மயர் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹோல்டர் 9 ஓட்டங்களிலும், ஆந்த்ரே ரஸ்செல் 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் நிலைத்து ஆடி தனது அரைச் சதத்தைப் பதிவு செய்த நிகோலஸ் பூரன் 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, ஷெல்டன் காட்ரெல் ஓட்டம் எதுவும் எடுக்காமலும், பிராத்வெய்ட் 14 ஓட்டங்களிலும், ஷனோன் கேப்ரியல் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 44.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை எடுத்தது.

இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர மற்றும் மார்க்வுட் தலா 3 விக்கெட்டுக்களும், ஜோரூட் 2 விக்கெட்டுக்களும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பிளங்கெட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ மற்றும் ஜோரூட் களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் பேர்ஸ்டோ 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துக் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ், ஜோரூட்டுடன் கைகோர்க்க, அணிக்குக் அது கூடுதல் பலமாக அமைந்தது. இதில் கிறிஸ் வோக்ஸ் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய ஜோரூட், நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் தனது 3ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 33.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை (213 ஓட்டங்கள்) எட்டியது.

இறுதியில் ஜோரூட் 100 ஓட்டங்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 10 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சார்பில் ஷனோன் கேப்ரியல் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *