இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாயவா அல்லது நந்தசேனவா தேரர் கேள்வி

இன்று பணியாற்றுவது கோட்டாபய ராஜபக்சவா? நந்தசேன ராஜபக்சவா? என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இது அரசாங்கமா? அல்லது விளையாட்டா? என எமக்கு எண்ணத் தோன்றுகிறது. குதிரை பாய்ந்து சென்றவுடன் தான் கதவை மூடுகின்றார்கள். இதுதான் இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கமும் செய்த வேலை.

கோவிட் அழிந்து விட்டது, இலங்கை முதல் இடத்திற்கு வந்துவிட்டது, இனி எமக்கு பயம், சந்தேகம் இல்லாமல் வேலைகளை செய்து கொண்டு போகலாம் என்ற நிலையில் தான் இந்த சுகாதார அதிகாரிகள் இருந்தார்கள். எமக்கு பிழைத்ததும் அங்குதான்.

நாடாளுமன்றத்தில் அவசரகாலநிலை சட்டதையும் நிறைவேற்றிக்கொண்டார்கள். எமக்கு அரசாங்கத்திடம் கேள்வி ஒன்றை கேட்க வேண்டும். அவசரநிலையை நிறைவேற்றிக் கொண்டு இந்த கோவிட் பரவலை அழிக்க முடியுமா?

உண்மையாகவே எமக்கு கோட்டாபய ராஜபக்சவை பதவிக்கு கொண்டு வரவே விருப்பமாக இருந்தது. இன்று பணியாற்றுவது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியா அல்லது நந்தசேன ராஜபக்சவா? என கேட்க தோன்றுகின்றது.

நந்தசேன ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சில் பதவி வகித்து சிறப்பான சேவைகளை வழங்கினார். மக்கள் மத்தியில் ஒரு தெளிவு ஏற்பட்டது. பெரிய தேவைப்பாடு ஒன்று உருவானது.

எமது நாட்டிற்கு இவரை போன்ற ஒருவர் வந்தால் நிச்சயம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. பாதுகாப்பு செயலாளராக இருந்த நந்தசேன ராஜபக்ச இந்த நாட்டிற்கு நல்லதொரு முன்னுதாரணமாக இருந்தார்.

ஆனால், இன்று கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டின் ஜனாதிபதி, அந்த பாதுகாப்பு செயலாளரை போன்று இந்த ஜனாதிபதிக்கு செயற்பட முடியாது.

ஜனாதிபதி ஒருவர் அதற்கும் மேல் இருக்க வேண்டும். பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டதை போன்றே இப்போதும் செயற்படுவது விரைவில் மாற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *