ரம்புட்டான் பழத்திலிருந்து நிபா வைரஸ் பரவியதாக கண்டுபிடிப்பு!

நிபா வைரஸ் 2018-ம் ஆண்டு கேரளத்தில் இந்த நோய் பரவியபோது வௌவால்கள் கடித்த மாம்பழத்திலிருந்து இந்த நோய் பரவியது என்று சந்தேகிக்கப்பட்டது. தற்போது வௌவால் கடித்த ரம்புட்டான் பழத்திலிருந்து இந்நோய் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நிபா வைரஸ் பாதித்து கேரளத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்றிலிருந்து மீள முடியாத நிலையில் உலகம் கட்டுண்டு கிடக்கும்போது, டெங்கு, நிபா போன்ற தொற்றுநோய்களின் பாதிப்பு தற்போது மக்கள் மத்தியில் கூடுதல் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் 4 நாள்களுக்கும் மேலாக காய்ச்சால் பாதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். பரிசோதனையில் சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று பாதித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுவனின் வீட்டைச் சுற்றிலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்குட்பட்ட பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனுடன் தொடர்பிலிருந்தவர்கள், மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்த கோழிக்கோடு அரசு மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 32 பேர் அதிக ஆபத்தானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், புனே தேசிய வைராலஜி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரும் கேரளத்துக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது மத்திய சுகாதாரத் துறையினர் சிறுவனின் தாயிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சில நாள்களுக்கு முன்பு ஒரு ரம்புட்டான் பழத்தை சிறுவனுக்கு சாப்பிடக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தரையில் பழுத்து விழும் பழங்களை எடுத்துச் சாப்பிடும் பழக்கம் சிறுவனுக்குக் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்தரன், “முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, ரம்புட்டான் பழத்திலிருந்து சிறுவனுக்கு நிபா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். நிபா வைரஸானது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய் வகையைச் சேர்ந்தது. நிபா வைரஸை வௌவால்கள் அதிகம் பரப்புகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு கேரளத்தில் இந்த நோய் பரவியபோது வௌவால்கள் கடித்த மாம்பழத்திலிருந்து இந்த நோய் பரவியது என்று சந்தேகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

தற்போது வௌவால் கடித்த ரம்புட்டான் பழத்திலிருந்து இந்நோய் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் விளையும் ரம்புட்டான் பழங்கள் சில தசாப்தங்களுக்கு முன்பு கேரளத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள கேரள வனத்துறையைச் சேர்ந்த உதவி கால்நடை மருத்துவ அதிகாரி அருண் சத்யன், “நிபா வைரஸ் பரவல் அண்மையில் மலேசியாவில் ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் நிபா வைரஸ் வீட்டு விலங்குகள் மூலம் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தரவுகளின்படி பழந்தின்னி வௌவால்கள்தான் தொற்று பரவுவதற்காக முக்கிய ஆதாரமாக உள்ளன.

வௌவால்களின் இடம்பெயர்வு, பாதுகாப்பு விழிப்புணர்வு.. நிபா வைரஸின் தற்போதைய நிலை என்ன?

இந்தப் பகுதியிலுள்ள பன்றிகளையும் பழந்தின்னி வௌவால்களையும் கண்காணித்து வருகிறோம். இந்தப் பகுதியில் அதிக பழந்தின்னி வௌவால்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் மத்தியக் குழுவினருக்குத் தகவல் தெரிவிப்போம். அவற்றைப் பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள்.

பொதுமக்கள் மரத்திலிருந்து கீழே விழுந்த, தரையில் கிடக்கும் பழங்களைச் சாப்பிட வேண்டாம். மேலும் ரம்புட்டான் உள்ளிட்ட எந்தப் பழமாக இருந்தாலும் பாதி கடித்த நிலையில் கீழே கிடந்தால் அந்தப் பகுதியில் வௌவால்கள் உள்ளன என்பதற்கான குறியீடு என்று புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *