பெண்ணின் அனுமதி இல்லாமல் உடலை தொட்டால் அது பலாத்காரம்!

பெண்ணின் அனுமதியில்லாமல் பாலியல் ரீதியான எண்ணத்துடன் உடலில் எந்த பகுதியை தொட்டாலும் அது பலாத்கார வரம்புக்குள் வரும் என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அகே மூவாற்றுபுழா பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த 11வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சந்தோஷ் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மூவாற்றுபுழா நீதிமன்றம் அவருக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்த சந்தோஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

அதில் இந்திய தண்டனை சட்டம் 375 படி பலாத்காரம் செய்யவில்லை. எனவே தண்டனையை குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் வினோத்சந்திரன், சியாத் ரகுமான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியது:  பெண்ணின் அனுமதியில்லாமல் பாலியல் ரீதியான எண்ணத்துடன் உடலில் எந்த இடத்தில் தொட்டாலும் அது பலாத்கார குற்ற வரம்புக்குள் வரும். எனவே தண்டனையை குறைக்க முடியாது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் சிறுமி என்று நிரூபிக்க போலீஸ் தரப்பு தவறியதால் சந்தோஷ் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *