இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டால் பாரிய ஆபத்து ஏற்படும்!

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களினால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நூற்றுக்கு 30 வீதமானோர் இதுவரையில் ஒட்சிசன் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக சுகாதார தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறான நிலைமைக்குள் நேற்றைய தினம் வரையில் இலங்கையில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் முழுமையாக நிரம்பியுள்ளன.

தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் போனால் பாரிய ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடு முழுவதும் உள்ள பிரதான வைத்தியசாலைகள் திறனை மீறி சென்றுள்ளது. நேற்று வரையில் சில வைத்தியசாலைகளில் தொற்றாளர்களுக்கு கட்டில்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. சில நோயாளிகள் வைத்தியசாலைகளின் அறைகளில் கீழே படுத்திருப்பதுடன் சிலர் வாசற்படியில் படுத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் வைத்தியசாலை நோயாளிகள் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஒட்சிசன் தேவை அதிகரிப்பதனால் எதிர்வரும் நாட்களில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட கூடும் என சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வரையில் வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கட்டில்கள் அனைத்தும்  முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து நான்கு நாட்களாக தினசரி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000யை கடந்துள்ளது. அதற்கு டெல்டா பரவலும் காரணம் என கூறப்படுகின்றது.

கடந்த நாட்களில்  முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், பேரணி மற்றும் பணி நிறுத்த போராட்டங்கள் போன்ற விடயங்கள் இந்த நிலைமை ஏற்பட பிரதான காரணமாகியுள்ளது.

தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போனால் கடந்த காலங்களில் இந்தியாவிற்கு ஏற்பட்ட நிலைமைக்கு சமமான நிலைமை ஒன்று இலங்கையினுள் ஏற்டுவதனை தவிர்க்க முடியாமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலைகளில் திறன் இல்லாமையினால் வீடுகளிலேயே நோயாளிகளை வைக்க வேண்டிய நிலைமை ஏந்பட்டுள்ளது. அத்துடன் அம்பியுலன்ஸ் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

தினசரி மரணங்கள் அதிகரிப்பதற்கு இந்த நிலைமையே காரணம் என சுகாதார தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இலங்கையில் நேற்றைய தினம் முதல் முறையான 74 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *