சட்டம் மனிதர்களுக்கா? அல்லது மதங்களுக்கும் பிரதேசங்களுக்குமா? 

– பஸ்றி ஸீ. ஹனியா
LL.B (Jaffna)

சட்டம் என்பதன் பிரதான  நோக்கம் பிரச்சினைகள் அற்ற சமூகத்தை உருவாக்கி ஒழுங்கு முறையான நெறியின் கீழ் மக்கள் வாழ்வை நடத்த உதவுவதாகும். இவ்வாறு பிரச்சினைகள் அற்ற சமூகத்தை உருவாக்க வேண்டுமென்றால் சட்டமானது சமமாக இருக்க வேண்டும்.

எது எதுவாக இருந்தபோதிலும் மனித மனங்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு குறிப்பிட்ட பொது நலமாக சில விடயங்களைப் பார்க்கும்போது சமமாக இருக்க வேண்டும் என நாம் விரும்பும் அதே விடயங்கள் சுயநலமாக இருக்கும்போது சமமற்ற தன்மையை நோக்கிச் செல்கின்றோமோ என்ற வினா எழுகின்றது.

இந்த வினாவுக்கான பதிலை எமது யாப்பின் ஊடாகத் தேடுவது சாலச்சிறந்ததாக இருக்கும். யாப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரைக்கும் ஒரு பேசுபொருளாகக் காணப்படுகின்ற முக்கிய விடயம் அரசியல் யாப்பின் 16ஆவது சரத்தின் முதலாவது பிரிவாகக் காணப்படுகின்றது. இதனை சட்டரீதியான புலமைத்துவ நாடுதலைத் தவிர்த்து சாதாரண மொழிநடையில் கூறுவோனால், இலங்கையில் தனியார் சட் டங்களாக உதாரணமாக தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம், கண்டியச் சட்டம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான சட்டங்களின் மூலம் நாட்டின் பல குழுக்கள் ஆளப்படுகின்றபோது இந்தத் தனியார் சட்டத்துக்கும் யாப்பினுடைய சரத்துகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும்போது தனியார் சட்டங்கள்தான் மேலோங்கும் என அரசியல் யாப்பு தெளிவாக உரைக்கின்றது.

சரத்து 16 (1) என்றால் என்ன?
அதன் அர்த்தம் என்ன?

சரத்து 16 (1) என்பது இலங்கையின் 1978 அரசமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்ள ஒரு பிரிவு. 1978 அரசமைப்புக்கு முன்னர் இருந்த அனைத்து எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத சட்டங்களும் ‘செல்லுபடியாகும் மற்றும் செயற்படும்’ என்று அது கூறுகின்றது. இதன் பொருள் அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளுடன் ‘முரணாக’ இருந்தாலும் இந்தச் சட்டங்கள் செல்லுபடியாகும்.

பிரிவு 16 (1) குறிப்பிடும் எழுதப்பட்ட மற்றும்
எழுதப்படாத சட்டங்கள் யாவை?

இந்த விதி 1978 இற்கு முன்னர் சட்டங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட சட்டங்களையும், அந்த ஆண்டுக்கு முன்னர் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டத்தையும் குறிக்கின்றது.

குற்றவியல் நடைமுறை 1976, முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் (MMDA) 1954, கண்டியன் திருமணக் கட்டளை 1954, தேசவழமை (pre – emption) 1948, தண்டனைச் சட்டம் கட்டளை 1883 (பிரிவு 365 உட்பட) ஆகியவை இத்தகைய சட்டங்களில் நன்கு அறியப்பட்டவை.

சரத்து 16 (1) இன் சிக்கல் என்ன?

600 இற்கும் மேற்பட்ட எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத சட்டங்களில் ஏதேனும் ஒரு நபரின் அடிப்படை உரிமைகளை மீறினால் அல்லது மீறப்பட்டால் அதை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது என்பதனை சரத்து 16 (1) குறிக்கின்றது.

இதன் பொருள் என்னவென்றால், மக்களுக்குச் சமத்துவம் காட்டாத, பாகுபாடு காட்டும் மற்றும் உரிமையை மீறும் சட்டங்களை இலங்கை தொடர்ந்து வைத்திருக்கின்றது; மேலும் பாதுகாக்கின்றது.

அனைவருக்கும் சமமான சட்டங்கள் வழங்கப்பட வேண்டும், அனைவருமே ஒரே சட்டத்தின்கீழ் ஆளப்பட வேண்டும், அவ்வாறு ஆளப்படும்போதுதான் சமூகமானது நெறிமுறையாக இருக்கும் என்ற அடிப்படை வாதத்துக்கு முரணான வகையில் ஒரே நாட்டுக்குள் வாழும் மக்களுக்குப் பல சட்டங்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டு அனைவரும் சமமாக பேணப்படுவர் என்று கூறுவது எவ்வாறு சமூகத்தை ஒழுங்குபடுத்தும்?

18 வயதுக்குப் பின்னர்தான் ஒருவரால் திருமண பந்தத்தில் ஈடுபட முடியும் என்ற சட்டத்தைக் கொண்டு வருவதற்கு வைக்கப்பட்ட வாதங்கள் நியாயமானதாக இருந்தால் முஸ்லிம் சட்டத்தின்படி 12 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்து கொடுப்பது எந்த அடிப்படையில் சரியாக அமையும்? சரி முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் 12 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்து கொடுப்பது சரியாக இருந்தால் பொதுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 18 வயது எல்லை எவ்வாறு சரியாக இருக்கும்?

18 வயதுக்கு முன் திருமணம் செய்யும் முஸ்லிம் அல்லாதோர் சட்டத்தால் தண்டிக்கப்படுவார் எனில், முஸ்லிமாகப் பிறந்த காரணத்தால் ஒருவர் 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்தாலும் தண்டிக்கப்படமாட்டார் எனில் சட்டம் இன ரீதியான பிரிவினையை ஏற்படுத்துகின்றதா அல்லது ஒரு மதத்தில் இருப்பவர்களை நேரடியற்ற வலுக்கட்டாயம் மூலம் இன்னொரு மதத்துக்கு  நுழைய வைக்கின்றதா? சட்டங்கள் மனிதர்களுக்கா? இல்லை மதங்களுக்கா?இல்லையெனில் ஒருவேளை பிரதேசங்களுக்காக இருக்க முடியுமா?

கண்டியன் சட்டமானது கண்டியில் இருக்கும் சிங்கள மக்களை மட்டும் ஆளுகின்றது எனில், கண்டி பிரதேசம் தவிர்ந்த மற்ற இடங்களில் வாழும் சிங்களவர்கள் அந்தச் சட்டத்தால் ஆளப்படுவதற்குத் தகுதியற்றவர்களா? அல்லது பிரதேச ரீதியாக சட்டம் எனும் பெயரில் ஒரே இன மக்களைச் சமமற்ற ரீதியில் நடத்துகின்றார்களா?

முஸ்லிம் சட்டமானது இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களை மட்டும் ஆள்கின்றது எனில், ஏன் இங்கு பிரதேச ரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தாது மத ரீதியான பாகுபாடு மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது? பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் வெவ்வேறு சட்டங்களைக் கொடுத்துப் பிரித்து வைப்பதற்கா இந்தப் பாகுபாடு ஏற்படுத் தப்பட்டுள்ளது?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விடயத்துக்கு முன்னர் சட்டமானது சகலருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். மரத்தின் வேர் உறுதியாக இருந்தால்தான் மரத்தால் உயிர்வாழ முடியும். நாம் மரத்தின் வேரைப் பார்ப்பதை விட்டுவிட்டு பழுத்து விடும் இலைகளில் குறை கூறிக் கொண்டிருக்கின்றோம்.

இப்போது நாம் மேலே எழுந்த வினாவுக்கான விடையை நோக்குவோமானால், மக்களாகிய நாம்தான் இந்தச் சட்டத்தை உருவாக்கினோம் மற்றும் உருவாக்க உறுதுணையாக இருந்தோம்.

நாம் ஓர் இனத்தவராக, மதத்தவராக அல்லது ஒரு பிரதேசத்துக்கு உரியவராக இருக்கும்போது பிரதேச ரீதியான, மத ரீதியான தனியார் சட்டங்களை ஆதரித்துக் கொண்டிருக்கின்றோம் என்பது சுயநலமாக இருக்கும். மேலும், அனைவரும் ஒரே சட்டத்தின் கீழ் ஆளப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நாம் நினைக்கின்றோம் எனில் அது பொது நலத்தின் வெளிப்பாடாகும். ஆகவேதான் நாம் எவ்வாறான மனநிலையில் இருக்கின்றோம் என்ற பதிலை எமது மனங்களே சொல்லட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *