கூடுதல் தளர்வுகளின்றி எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி வருகிற எதிர்வரும் 9ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், கொரோனா விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிக அளவில் கூட்டம் சேரும் இடங்களை மூடவும் கலெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த்தொற்று மாநிலத்தின் சில பகுதிகளில் சற்று அதிகரித்து வரும் சூழலில், நோய்த்தொற்று பரவலை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய் தொற்று பரவல், அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி இன்று முதல் வருகிற 9ம் தேதி (வெள்ளி) காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.  கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதும் அதனால் நோய்த்தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதும் விவாதிக்கப்பட்டது.

மேலும்,அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன்கருதி முடிவு செய்யலாம். அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

*  கடைகளின் நுழைவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.  
  • கடைகளின் நுழைவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
  • மேற்படி விதிமுறைகளை பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய்த்தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:

  • நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
  • கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட  ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
  • பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம்
மூன்றாம் அலை என்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படவே முடியாத வகையில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். வருமுன் காத்தலே விவேகம், இது நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம். மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்  அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
  • மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய  பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
  • தீவிரமாக நோய்த்தொற்று பரவலை, வீடுவீடாக  கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *