மக்களுக்கு பிரச்சினைகளை கொடுக்காமல் அதிகாரத்தை விட்டு விலகுங்கள் தேரர் எச்சரிக்கை!

அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் நியாயமான போராட்டங்களை தடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் நியாயமான போராட்டங்களை தடுப்பதால், இதற்கான இழப்பீட்டை எதிர்காலத்தில் அரசாங்கம் செலுத்த வேண்டியிருக்குமெனவும், அமைதியான முறையில் ஆட்சி செய்ய முடியாவிடின், பதவி விலகுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு குறித்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேவால்ஹிந்த அஜித தேரர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள தேரர் ஒருவர் பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மிகவும் வேதனையாகவுள்ளது நேற்றைய தினம் பொலிஸார், தேரர்களை கை, கால்களை பிடித்து தூக்கிக்கொண்டு செல்கின்றார்கள். வயதான தாய்மாரை, வயதான மூதாட்டி ஒருவரை கஷ்டபடுத்தி கை, கால்களை பிடித்து தூக்கிக்கொண்டு சென்று பேரூந்தில் பலவந்தமாக ஏற்றுகிறார்கள்.

அந்த நேரத்தில் அவர்கள் கீழே விழுகின்றார்கள். மிகவும் பாவம். இதற்கு குழப்பமடைய தேவையில்லை. இந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கோட்டாபய அவர்களுக்கெதிரானது மாத்திரம் அல்ல.
வரலாற்றை எடுத்துக்கொண்டால் அனைத்து நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த ஆர்பாட்டங்களின் போது செயற்படும் விதம் ஒன்று உள்ளது. இவ்வாறு செயற்படுவதால் இது பெரிய பிரச்சினையாக மாறும்.

வரலாற்றில் நடந்த இரத்த களவரங்களுக்கு மீண்டும் இடமளிக்க வேண்டாமென, ஆட்சியாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். எமது நாட்டில் வாழும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதற்கு ஒருபோதும் வழியமைத்திட வேண்டாம்.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என பிரிய வேண்டாம், மத ரீதியாக பிளவடைய வேண்டாம். கட்சி ரீதியாக பிளவடையாதீர்கள். எம் நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக சிந்தித்து ஒன்றாக இணைந்து ஒரு நாடாக செயற்பட்டு தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது.

இந்த நாட்டில் பிறந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் எம் மக்கள். அவர்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள். அவர்கள் எம் மக்கள் அவர்களை பறையர் என்று புலிகள் என்றோ தூற்ற வேண்டாம்.

இது மிகப்பெரிய தவறு. இந்த நாட்டின் மக்கள் அனைவரும் எமது உறவுகளே. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எம் அனைவருக்கு உண்டாகும் வயிற்றுப்பசி, துயரங்கள், கஷ்டங்கள் என அனைத்தும் ஒன்று.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை பறையர் என்கின்றனர். அவர் எமது நாட்டின் பிரஜை. அவரை அவ்வாறு அவரை தூற்றுவது தவறு. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, பிரிவினையின்றி செயற்பட வேண்டும்.

இல்லையேல் முன்னோக்கிப் பயணிக்க முடியாது. காவல்துறையையும், இராணுவத்தையும் பயன்படுத்தி மக்களை கட்டுப்படுத்த முயல்வதால் மீண்டும் பிரச்சினைகளே ஊற்றெடுக்கும்.

அரச அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை கட்டுப்படுத்தினால் அதற்கான நட்டஈட்டை கட்டாயம் செலுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு வந்து சேறும்.

மக்களுக்கு பிரச்சினைகளை கொடுக்காமல் அதிகாரத்தை விட்டு விலகுங்கள். இல்லாவிடின் இழப்பீட்டை செலுத்த வேண்டியிருக்கும்.” என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *