மைத்திரியுடனான சந்திப்பில் ஆக்கபூர்வமான முடிவில்லை! – இந்து அமைப்புக்கள் அதிருப்தி

“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. வழமைபோன்று பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வையே ஜனாதிபதி வழங்கியுள்ளார்” என்று இந்து அமைப்புக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன், ப.திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகர், வேலு குமார், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கன்னியா பிள்ளையார் ஆலயம் இடித்தழிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அவற்றை உடன் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி இதன்போது பணித்துள்ளார். இருப்பினும் அந்த விகாரையை அகற்றி மீண்டும் பிள்ளையார் ஆலயத்தை நிறுவுமாறு பணிப்பதற்கு ஜனாதிபதி தவறிவிட்டார் என்று இந்து அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

மேலும், முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் முளைத்துள்ள பௌத்த விகாரை எந்தவிதமான புராதான வரலாற்றையும் கொண்டிருக்கவில்லை என்று தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் ஜனாதிபதி முன்பாக வெளிப்படுத்திய பின்னரும், அந்த விகாரையை அகற்றுவதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தும் இந்து அமைப்புக்கள், ஆகக் குறைந்தது பிள்ளையார் ஆலயக் கட்டுமானப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்குக் கூட அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்தன.

“சைவ மக்களை இரண்டாவது பிரதான மதமாகக் கொண்ட எமது நாட்டில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செயல் தற்போது நடைபெற்று வருகின்றது. நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகள் அறுத்தெடுக்கப்பட்டமை, கன்னியா பிள்ளையார் கோயில் இடிக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகள் இதனை வெளிப்படுத்தி நிற்கின்றன.

இந்த அசம்பாவித நடவடிக்கைகளுக்கு நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி பதவியேற்கும்போது நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் சந்தோசமாக வாழ வைப்பது தனது நோக்கம் என்று கூறியிருந்தார். வாக்களித்த மக்களுக்கு அவர் தனது கடைமையைச் செய்ய வேண்டும். காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியாவில் ஆரம்பத்தில் புத்தர் சிலைகள் ஒன்றும் இருக்கவில்லை. அங்கு இருந்த பிள்ளையார் ஆலயம் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் கட்டப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கூறி இந்த அரசு அமைக்கப்பட்டது. ஆனால், மக்களின் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. கன்னியா விடயத்தையும் அப்படியே விட முடியாது” – என்றார் ஆறுதிருமுருகன்.

இதேவேளை, தென்கயிலை ஆதீனத்தின் இரண்டாவது குருமுதல்வர் தெரிவித்ததாவது:-

“கன்னியா பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மீண்டும் பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் அங்கு எந்தவொரு மதத் தலமும் அமைக்க இடமளியோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *