காதலிக்காக தானே உருவாக்கிய மிகச் சிறந்த பரிசு ATM இயந்திரம்!

வங்கிகளில் வரிசையில் நின்று, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் காத்துக்கிடந்த காலங்கள் உண்டு. ஆனால், இன்று நினைத்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கும் வசதியை நாம் பெற்று விட்டோம்.

அதற்குக் காரணம் ஏ.டி.எம் (Automated Teller Machine) மெஷின் என்ற இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்ததுதான்.

இன்று நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம் இயந்திரம், ஒருவர் அவருடைய மனைவிக்கு பரிசளிக்க உருவாக்கியது என்றால் நம்ப முடிகிறதா. ஆனால், அது தான் உண்மை. அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த ஏ.டி.எம். இயந்திரம்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்கு வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்.

பொறுமையுடன் காத்திருந்த அவர் பணம் பெறும் இடத்தை நெருங்கியபோது, “நேரம் முடிந்து விட்டது” என்று கூறி கணக்காளர் அடைத்து விட்டுச் சென்று விட்டார்.

பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.

இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.

அப்போது அவர் கண் முன்னால் பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின.

பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம்போல், எந்த நேரத்திலும் பணத்தை எடுக்க ஒரு மெசின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏ.டி.எம்.

இவர் உருவாக்கிய முதல் ஏ.டி.எம் இயந்திரம் 1969-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மெஷினா? என அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏ.டி.எம். அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.

உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாகக் குறைத்தார். ஏ.டி.எம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டுவிட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.

இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம்கள் உள்ளன.

ஏ.டி.எம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் 84-வது வயதில் கடந்த 2010, மே 19-ம் தேதியன்று காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *