இலங்கை கிரிக்கெட் சபையின் கொள்கை தான் தோல்விக்குக் காரணம்!

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) கொள்கை தான் இலங்கை அணியின் அண்மைக்கால தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் தற்போது நடைபெற்று வருகின்ற கிரிக்கெட் சுற்றுப்பயணம் தொடர்பில் பலரும் தமது அதிருப்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தொடரில் இலங்கை அணி வீரர்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய மோசமான ஆட்டம் குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் தமது விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகின்ற குமார் சங்கக்கார, பிபிசி செய்திச் சேவைக்கு விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

இதில் இலங்கை அணியின் அண்மைக்கால தோல்விகளுக்கான காரணம் என்ன என்பது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில்,

“ஒரு இலங்கையர் என்ற வகையில் எனது நாட்டைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் எனது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்த கிரிக்கெட் விளையாட்டு குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

கடந்த காலங்களில், பல தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். இலங்கை கிரிக்கெட்டின் நாமத்தை முழு உலகிற்கும் கொண்டு செல்ல அவர்கள் மகத்தான சேவையாற்றினார்கள்.

தற்போதைய இலங்கை அணியில் நான் எந்தவொரு வித்தியாசத்தையும் காணவில்லை. வீரர்களிடம் காணப்படுகின்ற ஆர்வம், உறுதிப்பாடு மற்றும் நாட்டிற்காக விளையாடுவதற்கான விருப்பத்தை நான் காண்கிறேன். அவர்கள் தமது நாட்டுக்காக விளையாட கிடைத்தமை தொடர்பில் பெருமைப்படுகிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த கிரிக்கெட் நிர்வாகத்தில் காணப்படுகின்ற காலாவதியான கருத்துக்கள் முக்கிய தடையாக உள்ளன. அவற்றை மாற்றுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தயக்கம் காட்டுவதே இதற்கு முக்கிய காரணம்.

எனவே, இது இலங்கை கிரிக்கெட்டின் நாமத்தை வளர்ப்பதற்குப் பதிலாக ஒரு சுயநலம் கொண்ட ஒரு பகுதிக்கு தள்ளப்படுவதை அவதானிக்கலாம்.

கடந்த காலங்களில் இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்ற நிலையில், தரவரிசையில பல புதிய மற்றும் சிறிய அணிகளையும் விட இலங்கை அணி பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

எனவே, இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பை மாற்றி வெற்றியின் பாதையில் நுழைய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று குமார் சங்கக்கார கருத்து தெரிவித்தார்.

“இலங்கை கிரிக்கெட் சபையின்; தற்போதைய கொள்கைகள் 1996இல் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது இருந்த கொள்கைகள் தான் என நான் அடிக்கடி கேள்விப்பட்டுள்ளேன்.

ஏனைய நாடுகள் புதிய கொள்கைகள் மற்றும் மிகவும் வலுவான முதல்தர போட்டிகளுடன் எங்களை கடந்து சென்றுவிட்டன. அவர்களின் தேர்வுக் கொள்கைகள் நிறைய மாறிவிட்டன.

ஆனால் இலங்கை அந்த விடயத்தில் மிகவும் தாமதமாகிவிட்டது என்று நினைக்கிறேன். இந்த கொள்கைகளின் எதிர்மறையான தாக்கத்தை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். எனவே, நாங்கள் தற்போது மாற வேண்டும்.

இது மற்றவர்களிடம் ஆலோசனைகளைப் பெறுவதைப் போல இலகுவான விடயமல்ல. ஒருவேளை, அவர்களும் தவறாக இருக்கலாம். இங்கே மிக முக்கியமான விடயம் நாட்டுக்கு சிறந்ததைச் செய்வது தான். நாட்டுக்காக விளையாடுகின்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது தான் இங்கு முக்கியமானது.

தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையும், சித்தாந்தங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இலங்கை அணியை மீண்டும் உலகின் நம்பர் ஒன் அணியாக மாற்றுவதற்கு தேவையான முடிவுகளை எடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று குமார் சங்கக்கார வலியுறுத்தினார்.

“இலங்கை கிரிக்கெட்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட வேறுபாடுகள், தனிப்பட்ட சண்டைகள் மற்றும் அனைத்து முகாம்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.

நாம் உண்மையிலேயே நாட்டை நேசிக்கிறோம் என்றால், நாம் இலங்கை கிரிக்கெட்டை நேசிக்கிறோம் என்றால், இந்த நேரத்தில் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், இலங்கை அணியை எவ்வாறு உலகின் நம்பர் ஒன் அணியாக மாற்றுவது என்பதுதான். இந்த கேள்விக்கான பதிலை இப்போது நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதை தொடர்ந்து நீடிப்பது என்பது அணிக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாகும்.

துரதிஷ்டவசமாக, இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடாதபோது, அவர்கள் தோல்வியின் பின்னணியில் காரணங்களைத் தேடுவதில்லை. எல்லோரும் வீரர்களை நோக்கி விரல் நீட்டுகிறார்கள். நான் அதைப் பற்றி மிகவும் வருந்துகிறேன்.

ஏனென்றால் அவர்களிடம் இருக்கும் திறமை எனக்குத் தெரியும். நாட்டிற்காக விளையாடுவதற்கான விருப்பத்தையும் அவர்கள் செய்யும் தியாகங்களையும் நான் அறிவேன். அவர்கள் எங்களை விட இலங்கை அணியை ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டு வர முடியும். எங்களால் முடிந்த ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்” என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *