குருவிகளை தனிமைப்படுத்தாமல் எடுத்துச் சென்றவர் கைது!

கத்தாரிலிருந்து, செல்லப் பிராணிகளாக வளர்க்கும் ஒரு தொகை குருவிகளை எடுத்து வந்த நபர் ஒருவர் அதில் 20 குருவிகளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமை தொடர்பில், பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த நிறுவன உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் (திருத்தச்) சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த நபரைக் நீர்கொழும்பு வலய குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

கடந்த ஜனவரி 7 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 62 குருவிகளை நபர் ஒருவர் கத்தாரிலிருந்து எடுத்து வந்துள்ளார். பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளரே செல்லப் பிரானிகளாக வளர்க்கப்படும் குறித்த குருவிகளை எடுத்து வந்துள்ளார்.

1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் (திருத்தச்) சட்டத்தின் பிரகாரம், வெளிநாடுகளிலிருந்து பிராணிகளை எடுத்து வரும்போது, மிருக வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய அவை, கட்டுநாயக்கவில் உள்ள பிரத்தியேக இடத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குதல் வேண்டும்.

இந்நிலையில், குறித்த 62 குருவிகளில் 42 குருவிகளை உரிய முறையில் தனிமைப்படுத்தியுள்ள குறித்த நபர் 20 குருவிகளை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தாமல் எடுத்து சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே இது குறித்து விசாரணை நடத்திய நீர்கொழும்பு வலய குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *