இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் கொரோனா!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 535 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடைய 517 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 18 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 840 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 82 ஆக காணப்படுகிறது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 521 பேர் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டிலுள்ள 66 கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 773 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 723 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கல்கிஸ்ஸ, காத்தான்குடி, வெல்லம்பிட்டிய மற்றும் ஓபநாயக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *