ஜனாஸா விவகாரத்தில் அரசாங்கம் இனவாதிகளின் பிடிக்குள் சிக்குண்டு தடுமாறுகிறது!

அரசாங்கம் இனவாதிகளின் கெடுபிடிக்குள் சிக்குண்டுள்ளது. அதனால்தான் ஜனாஸா எரிப்பு விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றது. அடக்கம் செய்ய அனுமதிக்கும்வரை நாங்கள் எமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (23) பொரளை கனத்தை மயானத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட அமைதிப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஜனாஸா எரிப்பு விடயத்தில் இனவாதிகளின் கெடுபிடிக்குள் சிக்குண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது. .

மேலும் ஜனாஸாக்களை எரியூட்டுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் 2 ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் சட்டத்தையும் மீறி செயற்படுமளவுக்கு சில வைத்தியசாலைகளின் சட்ட வைத்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத்தின் தீர்மானத்தை பின்பற்ற தயாரில்லாத நிலையிலே சில அதிகாரிகள் செயற்படுகின்றனர்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது வேண்டுமென்று, ஒரு சமூகத்தை பழிவாங்கும் நோக்கத்தில் செயற்படுவதாகவே எமக்கு தோன்றுகின்றது. அரசாங்கம் மயானத்தை நோக்கியதான தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. அதனால் அரசாங்கம் தற்போதாவது இந்த படுபாதகமான செயலை நிறுத்தவேண்டும்.

சர்வதேச மட்டத்துக்கு இந்தப் பிரச்சினை சென்றிருக்கிறது. ஜனாஸா எரிப்பை நிறுத்துமாறும் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் என பலர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த எந்தவொரு கடிதத்துக்கும் ஜனாதிபதி பதிலளிக்காமல் அவற்றை குப்பையில் போட்டிருக்கின்றார்.

அதேபோன்று சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் தொழில் நுட்ப குழுவில் யார் இருக்கின்றார்கள். அவர்கள் எந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் என நாங்கள் பல தடவைகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கேள்விகளை கேட்கும்போதும் இதுவரை அரசாங்கத்தினால் அதற்கு பதில் அளிக்கவில்லை. எனவே அரசாங்கம் தனது கடும்போக்கு கொள்கையை இப்போதாவது விட்டுவிட்டு, முஸ்லிம்களின் உரிமையை வழங்கவேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *