உணவில் உப்பு அளவு அதிகரிப்பால் ஆண்டுக்கு 30 இலட்சம் பேர் உயிரிழப்பு!

உணவில் சோடியம் அளவைக் கடைபிடிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில் சரியான உணவுக் கட்டுப்பாடுகள் இல்லாததால் ஆண்டுக்கு 1 கோடியே 10 இலட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 30 இலட்சம் பேர் உணவுப் பொருட்களில் கூடுதல் உப்பு நுகர்வு காரணமாக உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது.

உப்பின் அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக உடலில் சேரும் போது, உயர் ரத்த அழுத்தம், அதனை தொடர்ந்து இதய நோய்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தைகளில் விற்பனைக்கு வரும் பிரெட், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களில் உப்பு இருப்பதை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

எனவே உணவுப் பொருட்களில் உப்பின் அளவு சரியாக இருப்பதை உறுதி செய்ய அரசு நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

நொறுக்குத் தீனிகள் உட்பட 64 வகையான உணவு பொருட்களுக்கான சோடியம் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பதை நிர்ணயித்து 194 உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் அனுப்பியுள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 மில்லி கிராமுக்கு குறைவான உப்பை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *