லங்கா பிறிமியர் லீக் 26ஆம் திகதி ஆரம்பம்!

இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லங்கா பிறிமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள ஜப்னா ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், தம்புள்ள வைக்கிங் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் உள்ளிட்ட ஐந்து அணிகளும் தற்போது ஹம்பாந்தோட்டையை சென்றடைந்துள்ளன.

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், அனைத்து வெளிநாட்டு வீரர்களும், அதிகாரிகள் மற்றும் அணி உரிமையாளர்கள் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளனர்.

எனினும், கடைசி நிமிடத்தில் தொடரிலிருந்து விலகல், காயங்கள் மற்றும் முழு கொடுப்பனவுகளின் தொழில்சார்ந்த கோரிக்கைகள் காரணமாக, உரிமையாளர்கள் அணிகளில் ஏராளமான மாற்றங்களைச் செய்துள்ளனர்.

கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளைச் சேர்ந்த ‘யுனிவர்ஸ் பொஸ்‘ எனப்படும் கிறிஸ் கெய்ல் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் திடீரென தொடரிலிருந்து வெளியேறியமை, இந்தப் போட்டிகளில் மிகப்பெரிய ஏமாற்றங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட், நியூஸிலாந்து தொடருக்காக தெரிவு செய்யப்பட்டதால் அவரும் இத்தொடரிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக சஹீட் அப்ரிடி செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டாலும், தனது மகளுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் அவரால் ஒருசில ஆரம்ப போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இம்முறை லங்கா பிறிமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள ஐந்து அணிகளினதும் இறுதி வீரர்கள் பற்றி முழுமையான விபரம் எதிர்வரும் 24ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *