இந்தியன் – 2’ படத்துக்கு சிக்கல் !

உலகநாயகன் கமலஹாசனுடன் ஷங்கர் இணைந்த முதல் திரைப்படமான ‘இந்தியன்’ விமர்சகர்களின் பாராட்டுக்களோடு, ரசிகர்களின் அமோக வரவேற்பையும் ஒருசேர பெற்றதால், வசூலிலும் சாதனை படைத்தது.

இதனால் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வதுபோல், ஷூட்டிங்கின் ஆரம்பத்திலேயே பிரச்சினைதான்.

ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே கமலஹாசனின் மேக்கப், ஷங்கருக்கு திருப்தி தராததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஒப்பனை விவகாரம் முடிவுக்கு வந்த சில நாட்களில் பட்ஜெட் விவகாரம் தலை தூக்கியது.

கமலஹாசன் தவிர காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், விவேக் என முன்னணி நட்சத்திரங்களுடன், தினமும் ஐநூறு பேர், அறநூறு பேர் என பெருங்கூட்டம் தேவைப்பட்டதால், படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என நிர்ணயித்திருந்தார் ஷங்கர்.

“இது கட்டுப்படியாகாது’’ என நினைத்த ‘லைகா’ பட நிறுவனம் பட்ஜெட்டைக் குறைத்துக் கொள்ளும்படி ஷங்கரை வலியுறுத்தியது.

இந்த நிபந்தனையால் ஷங்கர் அதிர்ச்சி அடைந்தாலும், பல்லைக் கடித்துக் கொண்டு பட்ஜெட்டை 220 கோடி ரூபாயாகக் குறைத்தார்.

அதன்பிறகே படப்பிடிப்பு முழுவீச்சில் ஆரம்பமானது அடுத்த பிரச்சினை, விபத்து உருவத்தில் ஏற்பட்டு படப்பிடிப்பை நிறுத்த நேரிட்டது.

சென்னையின் புறநகர் பகுதியில்; நடந்த படப்பிடிப்பில் கிரேன் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு குழுவினர் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இதனால் படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டது. ஒருவாறு, ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர், மன அழுத்தத்தில் இருந்து மீண்டு, ஷூட்டிங் ஆயத்தங்களில் இறங்கியபோது, மீண்டும் மற்றொரு தடை.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், எட்டு மாதங்கள் மீண்டும் வீணானது.

பணம் வேஸ்ட். நேரம் காலம் வேஸ்ட். கால்ஷீட் வேஸ்ட். இடைவேளை வரை படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தெரிகிறது.

ஷூட்டிங் நடத்த அரசு கொண்டு வந்துள்ள விதிகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், படப்பிடிப்பை மீண்டும் தொடங்கலாம் என நினைத்திருந்த ஷங்கருக்கு, பட நிறுவனமான லைகா மீண்டும் ‘ஷாக்’ கொடுத்துள்ளது.

என்ன ‘ஷாக்’?

ஏற்கனவே ஏகப்பட்ட கோடிகள் செலவாகி விட்டதால் படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்க வேண்டும் என ‘லைகா’ சொல்வதாக தகவல்.

இதற்கு ஷங்கர் தயாராக இல்லை.

மற்றொரு அடியாக, இன்னும் இரண்டு மாதத்தில் ஷூட்டிங்கை முடித்துக் கொள்ளுமாறு கமல் தரப்பில் இருந்து நெருக்கடி.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க கமல் கால்ஷீட் கொடுத்துள்ளதோடு, மே மாதம் நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு.

படப்பிடிப்பு தொடங்குமா? என்பது தெரியாத சூழலில் இயக்குநர் ஷங்கர் பட நிறுவனத்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

“படத்தை மீண்டும் எப்போது ஆரம்பிக்க போகிறீர்கள்? உங்களின் திட்டம் என்ன? இப்போது ஷூட்டிங் ஆரம்பிக்கும் உத்தேசம் இல்லையென்றால், உடனடியாக சொல்லி விடுங்கள். நான் அடுத்த படத்துக்கு என்னைத் தயார்படுத்த வேண்டும்’’ என்று அந்தக் கடிதத்தில் ஷங்கர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் என்ன சொல்கிறது?

“மீண்டும் படப்பிடிப்பை தொடர வேண்டும் என்றால் 600 பேர் வரை கூட்டம் தேவைப்படுகிறது. எனவே அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மீண்டும் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகும்” என்கிறார்கள் லைகா ஆட்கள்.

படநிறுவனத்தின் நிபந்தனை மற்றும் கமலஹாசனின் அவசரம் ஆகிய இரு நெருக்கடிகளால், ஷங்கர் குழப்பத்தில் இருப்பது மட்டும் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *