படுதோல்வியை சந்தித்த தலைவி திரைப்படம்!

டெல்டா வைரஸ் அச்சத்தால், மக்கள் தியேட்டருக்கு வர தயங்குகிறார்கள். இதனால், கடந்த வாரம் வெளியான தலைவி, லாபம் படங்கள் படுதோல்வி அடைந்துள்ளன.தியேட்டர்களில் 50 சதவீத இருக்கையுடன் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் தியேட்டர்கள் மூடியே உள்ளன. இதற்கு காரணம், மக்களிடையே கொரோனா பயம் நீங்காததுதான். டெல்டா வைரஸ் அச்சம் காரணமாக, தியேட்டர்களுக்கு வர மக்கள் தயங்குகிறார்கள். இதனால், தமிழகத்தில் உள்ள 1,150 தியேட்டர்களில் 700 தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இந்த தியேட்டர்களிலும் ரசிகர் கூட்டம் வராததால் பல காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த வாரம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக வெளியான தலைவி படத்தில் கங்கனா ரனவத், அரவிந்த் சாமி நடித்திருந்தனர். மற்றொரு படமாக விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்த லாபம் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே படு தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 6 நாட்களில், இந்த படங்கள் தமிழகத்தில் தலா ரூ.1 கோடி கூட வசூலிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறுகின்றனர். இதேபோல், வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த படங்களை பார்க்க கூட்டம் வரவில்லை. இதற்கெல்லாம் டெல்டா வைரஸ் பீதிதான் காரணமாக கூறுப்படுகிறது.

கொரோனா பாதிப்புக்கு முன்பாக, தமிழகத்தில் 1,300 தியேட்டர்கள் வரை இருந்தன. கொரோனா பாதிப்பு தொடங்கி, தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டதும் கடும் நஷ்டத்துக்கு தியேட்டர் அதிபர்கள் தள்ளப்பட்டனர். மூடி கிடக்கும் தியேட்டர்களை அவர்களால் பராமரிக்க முடியவில்லை. இடையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோது, குறைந்த அளவிலான ரசிகர்கள் வந்ததால் படங்கள் தோல்வி அடைந்து நஷ்டம் ஏற்பட்டது. மின்சார கட்டணத்தை செலுத்த முடியவில்லை. ஜிஎஸ்டி, கேளிக்கை வரி செலுத்த முடியாமலும் அவதிப்பட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் 150 தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. இதற்கெல்லாம் ஒரே காரணம், கொரோனா பாதிப்புதான். தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் தடுப்பூசி இல்லை. இதனால், தியேட்டருக்கு வரும் பேமிலி ஆடியன்ஸ் பின்வாங்கிவிட்டனர். இதனால்தான், இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அக்‌ஷய்குமாரின் பெல்பாட்டம் இந்தி படம் தியேட்டர்களில் வெளியாகி, படு தோல்வியை கண்டது.

இத்தனைக்கும் இந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் தலைவி, லாபம் ஆகிய படங்களின் தோல்வியும் திரையுலகினரை திக்குமுக்காட வைத்துள்ளது. இதனால், பல பெரிய படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டு வருகின்றன. ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், யஷ் நடித்துள்ள கேஜிஎப் 2 ஆகியவை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் படமான நோ டைம் டு டை கூட ரிலீசாகாமல் ஒன்றரை ஆண்டுகளாக பெட்டியில் கிடக்கிறது.இதற்கிடையில், மக்களும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியான ஓடிடி, ஹோம்தியேட்டரின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பி வருகின்றனர். ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால், தியேட்டர்களை மக்கள் மறந்து வருகின்றனர். மொபைலில் எண்ணற்ற உலக படங்கள் ஓடிடி மூலம் கிடைத்து விடுகிறது. இதற்காக ஆண்டு சந்தா செலுத்தி ஓடிடி வாடிக்கையாளர்களாக மக்கள் மாறி வருகின்றனர். திரைப்படங்கள் மட்டுமின்றி தரமான வெப்சீரிஸ்களும் ஓடிடியில் கிடைப்பதால் ரசிகர்களுக்கு பெரும் பொழுதுபோக்கு அம்சமாக ஓடிடி உருவெடுத்துள்ளது. இதனால் தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *