கொரோனா எச்சரிக்கையைப் புறந்தள்ளாதீர்கள்!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த உடல் வளக்கலை சிறப்பு நிபுணர் டிமிட்ரி ஸ்டுசுக் (Dmitriy Stuzhuk) கட்டுக்கோப்பான உடலமைப்பு கொண்டவர். 33 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள்.

இவர் கடந்த அக்டோபர் 15-ம் தேதி தனது வளைதள பக்கத்தில், “கோவிட்-19 என்ற நோய் இல்லவே இல்லை. அது ஒரு பொய் புரட்டு என்றே கூறி வந்தேன், அந்த நோயால் நான் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணம் வரை” என பதிவிட்டுள்ளார்.

இவர் தனது தொழில் நிமித்தமாக துருக்கிக்கு சென்று சில நாட்கள் தங்கி இருந்த நிலையில், வயிற்றுப் போக்கு மற்றும் மூச்சுச் திணறல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவருக்கு கோவிட் வந்திருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருந்து அக்டோபர் 15-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஒரே நாளில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவரின் இழப்பிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா சில எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

கோவிட் என்ற நோய் உடல் வலிமை மிகுந்த ஆட்களையும் சாய்க்க வல்லது. நான் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறேன் என்பதோ, பேலியோ உணவு முறை கடைபிடிக்கிறேன் என்பதாலோ, தினமும் பத்து கிலோமீட்டர் ஓடும் அளவு உடல் தகுதி எனக்கு உண்டு என்பதாலோ கோவிட் வருவதை ஒருபோதும் தடுக்க இயலாது. அதனால் ஒருவர் உயிரிழப்பதையும் தடுக்க முடியாது.

நாம் ஒரு விஷயத்தை நம்புகிறோம் என்பதற்காக, அந்த விஷயத்தை நம்மைச் சார்ந்திருக்கும் அல்லது நம்மை நம்பும் பலருக்கும் கூறி அவர்களையும் திசை திருப்புதல் கூடாது.

ஆம்.. இந்த விஷயத்தில் தனக்கு நோய் வரும் வரை… “கோவிட்லாம் சும்மா” என கூறியவர், கோவிட் நோய் வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நிலைக்குச் சென்று நுரையீரல்/இதயம் திடீரென செயலிழந்து உயிரிழந்திருக்கிறார்.

எனவே, நாம் நம்பிக்கை கொள்ளும் ஒரு விஷயம் நமக்கும் நம்மை சார்ந்தோருக்கும் ஊறு செய்யும் விஷயமாக மாறாதவரை அந்த நம்பிக்கை சிறந்தது. மாறாக ஊறு செய்யுமாயின் உடனே அதை நாம் சரிசெய்து கொள்ள வேண்டும்

கொரோனா விஷயத்தில் ட்ரம்ப் செய்ததும் இதே தான். தனக்கு நோய் வராத வரை கொரோனா என்பது ஒன்றுமே இல்லை என்பது போல பேசிவிட்டு, தொற்று ஏற்பட்டதும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உலகத்திலேயே பிரத்யேகமான சிகிச்சை கிடைக்க உடல் நலம் பெற்றார்.

நாம் ஒரு விசயத்தை போதிக்குமுன் பல முறை யோசிக்க வேண்டும். நாம் கூறுவதை நாலு பேர் கேட்கிறார்கள் என்பதற்காக நமது நம்பிக்கைகளை அவர்கள் மீது திணித்தல் கூடாது.

காரணம் இந்தக் காலத்தில், மக்களில் பெரும்பான்மை கூறுபவன் யார் என்று தான் பார்க்கிறார்களே தவிர, அவன் கூறுவது என்ன என்று பார்ப்பதில்லை.

இதனால் தான் பல போலிக் கருத்துகள், மருத்துவ அறிவியலுக்கு எதிரான கருத்துகள் மிக எளிதாக பரவுகின்றது.

யாரையும் கண்ணை மூடிக்கொண்டு கடைபிடிக்காமல், அவரவர் சுயசிந்தனைக்குட்பட்டு நன்றாக அகமெனும் வாய்க்குள் அசைபோட்டு ஒரு சிந்தனையை செரிமானம் செய்ய வேண்டும்.

நாம் போகும் பாதை தவறென்று தெரிந்தால் உடனே வேறு பாதைக்கு மாற்றம் காண வேண்டும்.

பயணங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பல நாடுகளும் இரண்டாம் அலையை சந்தித்து வருகின்றன.

முதல் அலை தந்த தாக்கத்தில் உலகமே சோர்ந்து போய் இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ்கள் சோர்வடையாமல் பரவும் தன்மை கொண்டவை.

வயது குறைவாக இருக்கிறது என்பது நாம் செய்யும் முட்டாள் தனங்களுக்கும் அசட்டைத் தனங்களுக்கும் சாக்கு கிடையாது.

இறந்துபோன இந்த நபர் வெறும் 33 வயதானவர். இவருக்கு இதற்கு முன்பு வேறு நோய் எதுவும் கிடையாது. இது ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம்.

கொரோனா தொற்று என்பது உண்மை அது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் என்பதும் உண்மை. இரண்டாம் அலையின் தாக்கம் இனிவரும் காலங்களில் நம்மை தாக்கும் என்பதும் உண்மையாகக் கூடும்.

எனவே கட்டாயம் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவோம். பாதுகாப்பான சமூக இடைவெளியைக் கடைபிடிப்போம். நோயின் அறிகுறிகளை புறந்தள்ளுவோம். கைகளை அடிக்கடி கழுவுவோம்.

கொரோனாவுக்கு எதிரான போரில் சாக்குபோக்கு கூறி சோடைபோகாமல் தொடர்ந்து நம்மையும் நம் சுற்றத்தாரையும் காக்கும் பணியில் ஈடுபடுவோம் என்று உறுதி ஏற்போம்.

நன்றி: Dr.A.B.ஃபரூக் அப்துல்லா முகநூல் பதிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *