ரணிலின் மீது அதிருப்தியால் கரு சஜித்துடன் சங்கமம்?

இலங்கையில் பழமையான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை தனது உறவினர் ருவான் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் பதவியைக் கையளித்து அதற்கான பிள்ளையார் சுழியையும் போட்டுள்ளார்.

2023 ஆம்வரை தலைமைப்பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, அதற்கேற்றவகையில் செயற்குழுவுக்கு தனது விசுவாசிகளையே பெரும்பாலும் உள்வாங்கியிருந்தார். அவர்களும் ‘ரணில்’ புராணம் பாடினர். ஆலவட்டம் ஏந்தினர். எனினும், பொதுத்தேர்தலில் ஏற்பட்ட வரலாற்று தோல்வியானது ரணிலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர் விரும்பாவிட்டால்கூட தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்தாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையும் உருவானது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை பலர் குறிவைத்தனர்.போட்டியும் உச்சம் தொட்டது. இந்நிலைமை நீடித்தால் அது மேலும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், கட்சியின் அதிகாரம் மூன்றாம் தரப்பின் கைகளுக்கு சென்றுவிடும் என்பதால் தனது குள்ளநரி தந்திரத்தை பயன்படுத்தி ‘தந்திரோபாய பின்வாங்கல்’ மூலம் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதாவது தனது ஏவல்படி நடக்கும் ருவான் விஜேவர்தனவுக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்கி, ஜனவரியில் அவரை தலைவராக்குவதே ரணிலின் ‘மெகா’ திட்டம். செயற்குழுவில் எவ்வித வாக்கெடுப்பும் இன்றி அவரை பிரதித் தலைவராக்க வேண்டும் என்பதும் ரணிலின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஆனாலும் ரவி கருணாநாயக்கவும் ‘உபதலைவர்’ என்ற அடிப்படையில் பிரதித் தலைவர் பதவியைக்கோரியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டிய நிலைஏற்பட்டது. ரணிலின் திட்டம்படியே ருவான் வெற்றிபெற்றார்.

புதிய பிரதித் தலைவர் நியமனத்தோடு ஐ.தே.கவை ஆட்டிப்படைக்கும் பிரச்சினைகள் முடிவுக்குவரும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனாலும் நெருக்கடியான கட்டத்திலும் ரணிலுக்கு ஆதரவாக இருந்தபலர் அவரை கைவிடுவதற்கு முடிவெடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற ஆசையை கருஜயசூரியவும் வெளியிட்டிருந்தார். ரணிலுக்கு கடிதம்மூலமும் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். ஆனாலும் இதற்கு ரணில் உடன்படுவதாக தெரியவில்லை. தனது மாமாவான கருவுக்கு தலைமைப்பதவி கிடைத்தால் தானும் கரைசேர்ந்துவிடலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த நவீனுக்கு ரணிலின் நகர்வுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சிறிகொத்தவில் ‘தேசிய அமைப்பாளர்’ அலுவலகத்தில் இருந்த தனது ஆவணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தம்பியான மயந்த திஸாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருப்பதால், காமினி திஸாநாயக்கவுக்கு நன்றிசெலுத்தும் விதத்தில் அவருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கருஜயசூரியவும், நவீனும் சஜித்துடன் சங்கமிக்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தயாகமகே தரப்பும் ரணில்மீது அதிருப்தியில் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *