இலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள் கண்டுபிடிப்பு!


.
பாண்டியர் கால காசு என நம்பப்படும் நாணயக் குற்றிகள், இலங்கையின் வடக்கு மாகாணம் – மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அல்பேர்ட் என்பவரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, நிலத்தைத் தோண்டியபோது கடந்த வெள்ளிக்கிழமை இந்த நாயணக்குற்றிகள் கிடைத்துள்ளன.

இந்த நாணயங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், 1904 நாணயக் குற்றிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாகவும் மன்னார் – நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் பி. புவனம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, காணி உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு சென்ற நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர், அந்த நாணயங்களை முருங்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
தற்போது அந்த நாணயக்குற்றிகள் அனைத்தும் மன்னார் நீதிமன்றின் ஊடாக, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லயனல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உப தவிசாளர் புவனம் தகவல்.
*******************************-*
குறித்த நாணயங்களை தான் பார்த்ததாகவும், அவற்றின் ஒரு பக்கத்தில் இரண்டு மீன்கள் எதிரெதிராகக் காணப்படுவதாகவும், மற்றைய பக்கத்தில் மான் அல்லது நந்தி போன்றதொரு உருவம் காணப்படுவதாகவும் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் பி. புவனம் கூறினார்.

“அல்பேர்ட் என்பவர், தனது காணியை 14 வருடங்களுக்கு முன்னர் குளத்து மண்கொண்டு நிரப்பியுள்ளார். அந்தக் காணியில் வீடொன்றை அமைப்பதற்காக நிலைத்தைத் தோண்டும் வேலைகள் கடந்த வாரம் நடந்து கொண்டிருந்தன. அப்போதுதான் வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணியளவில் குறித்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த நாணங்கள் குறித்த காணியில் இருந்ததா? அல்லது அந்த காணியில் கொட்டப்பட்ட குளத்து மணலில் இருந்ததா? எனத் தெரியவில்லை.

கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் – மண் பாத்திரமொன்றில் இருந்திருக்க வேண்டும். நிலத்தைத் தோண்டும் போது அந்தப் பாத்திரம் உடைந்திருக்கும் என்று நம்புகிறோம். ஏனென்றால், அந்த நாணயக் குற்றிகளுடன் உடைந்த பாத்திரத்தின் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன” என, உப தவிசாளர் புவனம் மேலும் கூறினார்.

குறித்த நாணயங்களின் தற்போதைய பணப் பெறுமதி எவ்வளவு என கணக்கிடப்பட்டு, அந்தத் தொகையில் அரைவாசியை, குறித்த காணியின் உரிமையாளருக்கு அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கவுள்ளதாகவும் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *