அங்கொட லொக்கா கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன

அங்கோட லொக்கா… தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பாக  பேசப்படும் பெயர். இன்டர்போல் (சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட காவல்துறை) அமைப்பால் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட 35 வயது குற்றவாளி, மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பெயரை மாற்றி, முகத்தை மாற்றி தமிழகத்தில் வாழ்ந்தது எப்படி என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தமிழக காவல்துறையை தற்போது உலுக்கி எடுத்து வருகிறது.

சினிமாவை மிஞ்சும் கொலைகள்…
குற்றவாளிகளை கோர்ட்டிற்கு வேனில் அழைத்துச் செல்லும் போது மற்றொரு கும்பல் வழிமறித்து துப்பாக்கியால் சுடுவதை சினிமாவில் பார்த்திருப்போம். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கையில்  நீதிமன்றத்திற்கு கைதிகளை ஏற்றிச்சென்ற போலீஸ் வாகனம் மீது ஒரு கும்பல் நவீனரக துப்பாக்கிகளால் சுட்டது. இதில் இலங்கையின் நிழல் உலக தாதாவான அருணா தாமித், சமயன் சலனா திலக், அமிலா பிரசன்னா சம்பத், கேலம் பிரியங்கரா, சுரங்க பிரசன்னா மற்றும் 2 போலீசார் என 7 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த கொலைகளுக்கு `ஸ்கெட்ச்’ போட்டது இந்த அங்கோட லொக்கா தான்.

இலங்கையிலிருந்து தப்பியோட்டம்
லசந்த சந்தன பெரோரா என்ற  அங்கோட லொக்காவிற்கு தெரியாமல் இலங்கையில் எதுவும் நடக்காது. உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் நிழல் உலக தாதா  தாவூத் இப்ராஹிம் போல தன்னை நினைத்துக் கொண்டு இலங்கையை ஆட்டிப்படைத்த அங்கோட லொக்கா மீது  கொலை, கொள்ளை,  கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவருக்குத் ெதரியாமல் இலங்கையில் யாரும் நிலம் வாங்கவோ, விற்கவோ முடியாது. அதற்கு கமிஷனை கறப்பதில் கறார் பேர்வழியான அங்கோட லொக்கா கழுத்து நிறைய நகை, கட்டுமஸ்தான உடம்பு என சினிமா வில்லன் போலவே காட்சியளிப்பார்.

இலங்கையில் போலீஸ் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பின் லொக்காவை பிடிக்க அந்நாட்டு போலீஸ் வலை விரித்தது. ஆனால், போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி கள்ளத்தோணி மூலம் இந்தியாவிற்கு தப்பினார் லொக்கா. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகப் போலீசாரால் கைது செய்யப்பட்ட அங்கோட லொக்கா, ஜாமீனில் விடப்பட்டார். இதன் பிறகு தலைமறைவானார். பெங்களூருவில் அவர் பதுங்கியிருப்பதாக போலீஸ் கருதியது. ஆனால், போலீசாரிடம் பிடிபட்ட லொக்காவின் கூட்டாளிகள் சொன்ன தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தூங்கி வழிந்த தமிழக போலீஸ்
கோவையில் அங்கோட லொக்கா  ஜூலை 3ம் தேதி விஷம் வைத்து கொல்லப்பட்டதாக  அவர்கள் கூறிய செய்தியை தமிழக போலீஸ் வட்டாரம் நம்புகிறது. ஆனால், அதை இலங்கை போலீசார் நம்பவில்லை. `இலங்கை தாதா தமிழகத்தில் கொலையா?’ என்ற தொலைக்காட்சி செய்திக்குப் பிறகு தான், இலங்கையின் மோஸ்ட் வாண்டட் கிரிமினல் தமிழகத்தில் டேரா போட்டிருந்த விஷயமே தமிழக போலீசுக்குத் தெரிய வந்துள்ளது.

நடந்தது என்ன?
மதுரை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதீப்சிங் மாரடைப்பால் உயிரிழந்ததாக பீளமேடு போலீசில் புகார் செய்தார். இதற்காக அவர் பிரதீப்சிங்கின்  ஆதார் அட்டையை சான்றாக வழங்கினார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின் சடலத்தை சிவகாமசுந்தரியிடம் ஒப்படைத்தனர். சிவகாமசுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி என்ற இளம்பெண்ணும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள லொக்காவின் சகோதரிக்கு வீடியோ அழைப்பு மூலம் இறுதி சடங்கு காட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. விசாரணையில், உயிரிழந்தவர் இலங்கையின் டான் அங்கோட லொக்கா எனத் தெரிந்தது. இதையடுத்து போலி ஆவணங்களைப்  பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்ததற்காக வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, அமானி தான்ஜி, அவர்களுக்கு உதவிய  தியானேஷ்வரனை போலீசார் கைது செய்தனர்.

கொலையா, மாரடைப்பா?
அங்கோட லொக்காவை அவரது கள்ளக்காதலி அமானி தான்ஜி கொலை செய்தார் என்று   போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் அமானியின் கணவரை அங்கோட லொக்கா  கொலை செய்து விட்டு அமானியை கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பழிவாங்க அமானி தான்ஜி உணவில் விஷம் கலந்து கொடுத்து லொக்காவை பழி வாங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோவையில் இறந்தவரின் நகம் நீலம் பூத்துக் கிடந்ததால் இந்த சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கோட லொக்காவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதும்  சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த விபரங்களை இலங்கை போலீசார் நம்ப மறுக்கின்றனர்.

இறந்தது அங்கோட லொக்காவே அல்ல. பிரதீப்சிங் என்ற பெயரில் ஒருவரை உருவாக்கி கொன்று விட்டு அங்கோட லொக்கா தப்பி விட்டார் என்றும் இலங்கை போலீஸ் சந்தேகப்படுகிறது. அதற்கு அவர்கள் கூறும் காரணம்,  `கோவையில் உயிரிழந்த உடலை எதற்காக, மதுரை வரை எடுத்துச் சென்று எரியூட்ட வேண்டும்?’ என்பது தான். எப்போதேல்லாம் இலங்கையில் நுழைய முடியாதபடி  லொக்காவிற்கு  நெருக்கடி வருகிறதோ, அப்போதேல்லாம் இப்படி இறப்பு நாடகம் போட்டு உள்ளே நுழைய முயற்சி செய்வார் என்று இலங்கை போலீசார் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். அதற்காகத் தான் கோவையில் லொக்கா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளதாக இலங்கை போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

போலி ஆதார் தயாரிப்பு
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த  லொக்கா பெங்களூரு, சென்னை, கோவை, மதுரை என்று பல்வேறு பகுதிகளில்  சுற்றித் திரிந்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில்  அப்பார்ட்மென்டில் தங்கியிருந்த அவர், இதன் பின் சேரன்மாநகர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் தங்கியிருந்த வீடு அமெரிக்காவில் உள்ள வழக்கறிஞருக்கு சொந்தமானது என்றும் தியானேசுவரன் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அங்கோட லொக்காவிற்கு பிரதீப்சிங் என்ற பெயரில் போலி ஆதார்கார்டு மதுரையில் தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளிக்கு ஆதார் கார்டு எப்படி உருவாக்கப்பட்டது என்ற கேள்வி போலீசாரிடம் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் அன்றைய தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை மட்டுமின்றி உலகத்தின் பலமுனைகளைச் சேர்ந்த குற்றவாளிகள் தமிழகத்திற்குள் சர்வசாதாரணமாக நுழைந்து விடும் ஆபத்து அங்கோட லொக்கா விவகாரத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. அத்துடன், பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் தமிழகத்தில் ஆதார் கார்டு ரெடி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதா என்ற சந்தேகத்தையும் இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.

துபாயிலிருந்து ஸ்கெட்ச்
இலங்கையின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துர மதுஷின் நெருங்கிய சகாவாக அங்கோட லொக்கா செயல்பட்டு வந்துள்ளார். இவரது கேங்  இலங்கையில் 2000ம் ஆண்டு அதிக குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது. போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, கடந்த மஹிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தில் லொக்கா உள்ளிட்டவர்கள் இலங்கையை விட்டு படகு மூலம் இந்தியாவிற்கு தப்பி அங்கிருந்து துபாய் சென்றுள்ளனர். அங்கிருந்தவாறே போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.

லொக்காவின் சகா மாகந்துர மதுஷ் உள்பட 31 பேர்  2019ம் ஆண்டு மே  5ம் தேதி துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்து மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்பட்டார். இதன் பின் லொக்காவை கைது செய்ய இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தான் அவர் கோவையில் உயிரிழந்ததாக வந்த செய்தியை  இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்தச் சர்ச்சைகளுக்கு பிரேதப் பரிசோதனை மற்றும் டிஎன்ஏ சோதனைதான் முடிவு தரும் என இலங்கை அரசு திடமாக நம்புகிறது.

சிக்கிய போலி பாஸ்போர்ட்
இதற்காக அங்கோட லொக்கா உண்மையில் உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனைக்கு தேவையான மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்களை இலங்கை போலீசார்  இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  ஏனெனில், தமிழகத்தின் கோவையில் மரணமடைந்ததாக நம்பப்படும்  நபரின் உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது  கொடுக்கப்பட்ட அறிக்கையில், இறந்தவரின் கைவிரல் நகம் மற்றும் கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இறந்தவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இறந்தவர் லொக்காவே அல்ல என்ற சந்தேகத்தை இன்றுவரை இலங்கை போலீஸ் எழுப்பி வருகிறது. அதற்கான தரவுகளை  அது இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. அங்கோட லொக்கா, `இல்லுவகே சந்துன்’ என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம்  தமிழகத்திற்குள் நுழைந்ததாக  2017ம் ஆண்டு ஜூன் 9ம்  கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது  இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அங்கோட லொக்காவின் கைவிரல் அடையாளங்களை பெற்றிருந்தாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களைக் கொண்டு கோவையில் இறந்தவரின் கைவிரல் அடையாளங்களை சோதனை செய்வதன் மூலம் இறந்தது லொக்காவா அல்லது வேறு நபரா எனத் தெரிய வரும் என இலங்கை காவல்துறை நம்புகிறது.

சிபிசிஐடி விசாரணை ஒரு பக்கம் தீவிரமடைந்தாலும், மத்திய உளவு அமைப்பான `ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்க்’ என்றழைக்கப்படும் ‘ரா’ அதிகாரிகளும் கோவையில் லொக்கா மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவையில் உண்மையில் இறந்தது யார் என்ற கேள்விக்கான விடை தான் அங்கோட லொக்காவின் வரலாற்றின் பக்கங்களை முடித்து வைக்கப் போகிறதா, தொடரப்போகிறதா என்று தெரிவிக்கும்.

கடத்தலும் கழுகும்…
ஆசன வாயில் வைத்து தங்கத்தை, கஞ்சாவை கடத்துவது ஒரு ரகம் என்றால், அங்கோட லொக்காவின் கடத்தல் `அட போட வைக்கும் ரகம்’. தனது கடத்தலுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட வெளிநாட்டு கழுகை லொக்கா பயன்படுத்தியுள்ளார். கடல் கடந்து பறக்கக்கூடிய இந்த கழுகு 15 கிலோ  எடையை சுமக்கப் பழக்கப்பட்டதாகும். இந்த கழுகு, அதை பராமரித்த இரண்டு பேரையும் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல தனது கடத்தல் தொழிலுக்கு பூனையையும் லொக்கா பயன்படுத்தியதாக இலங்கை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லொக்கா சொத்துக்கள் அரசுடமையாக்க முடிவு
இலங்கை காவல்துறையின் செய்தி தொடர்பாளர் எஸ்.எஸ்.பி ஜாலியா சேனரத்ன கூறுகையில், “அங்கோட லொக்கா இறப்பு தொடர்பாக இதுவரை எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் கிடைக்கவில்லை. இதற்கு முன்பே இறந்துவிட்டதாக லொக்கா நாடகமாடியுள்ளான். இறந்துவிட்டதாகச் செய்தியைப் பரப்பி, வேறு பெயருடன் வேறொருவர் அடையாளத்துடன் இலங்கைக்குள் ஊடுருவிக் குற்றச் செயல்களைச் செய்ய திட்டமிடலாம்.  போலியான தகவல்களைப் பரப்பி வெளிநாடுகளில் பதுங்கிக்கொள்ளக் கூட வாய்ப்பு இருக்கிறது. அறிவியல்ரீதியாக இந்த தகவலை விசாரித்து வருகிறோம். மேலும் அங்கோட லொக்கா இலங்கையில் முறையற்ற வகையில் ஈட்டிய அனைத்து சொத்துக்களையும் அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜிம்களுக்கு புரோட்டின் சப்ளை
சினிமா நடிகராக வேண்டும் என்ற ஆசை அங்கோட லொக்காவிற்கு இருந்துள்ளது. அதற்காக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள கோவையில் ஒரு ஜிம்மே கதியென்று இருந்துள்ளார்.   அத்துடன் முக அமைப்பையும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் கோவையில்  உள்ள உடற்பயிற்சி கூடங்களுக்கு புரோட்டின் சப்ளை செய்யும் விற்பனையாளராக  லொக்கா இருந்ததற்கான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் திரட்டியுள்ளனர்.

பல்வேறு தோற்றத்தில் அங்கோட லொக்கா
போலீசார் அடையாளம் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக அங்கோட லொக்கா பல்வேறு வகையில் தன்அடையாளத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இதற்காக அவர் மூக்கை சர்ஜரி செய்ததாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிய பிறகு அவரை அடையாளம் காண முடியாத வகையில் நடை,உடை, பாவனை, தோற்றத்தை மாற்றியுள்ளார்.

யார் இந்த சிவகாமசுந்தரி?
இலங்கை தாதா அங்கோட லொக்காவுக்கு உதவியதன் மூலம் திடீர் கோடீஸ்வரியாக மாறியவர் என போலீசாரால் சுட்டிக்காட்டப்படுபவர் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி. இவரும், வினோத் என்பவரும் 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். 2018ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளனர். சிவகாமசுந்தரியின் நடவடிக்கையில் `வித்தியாசம்’ தெரிந்து தட்டிக் கேட்டதால் தன்னை கொல்ல முயன்றார் என்றும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக வினோத் கூறிய புகாரால் லொக்கா வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *