நாளாந்தம் நான்கு மணித்தியால மின் விநியோகத் தடை?

நாடு பூராகவும் மின் விநியோகத்தை நாளை மறுநாள் வரை துண்டிக்கப்படாமல் பேண முடியும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் மின்சார விநியோகத்திற்குத் தேவையான எரிபொருளை எதிர்வரும் 22ஆம் திகதி வரை வழங்குமாறு கோரி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் நாளைய தினம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும், நாளைய தினம் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது எரிபொருள் விநியோகம் தொடர்பில் இலங்கை பெற்றோலியம் தெளிவான தீர்மானத்தை வழங்காவிடின் மின்சார விநியோகம் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானங்களை மேற்கொள்ளும். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக தேசிய மின் உற்பத்தியில் 300 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்துக்கு 3 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் நாடு பூராகவும் மின் விநியோகத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி  வரை துண்டிக்கப்படாமல் பேண முடியும்.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவால் நாட்டில் பாரிய மின் விநியோக தடை  ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதனால் நாளாந்தம் நான்கு மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடைக்குத் தயாராக இருக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்தார்.

மேலும்,  இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3 ஆயிரம் மெற்றிக் டொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபையிடம் காணப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மூன்று நாட்களின் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு, மின் விநியோகத் தடையை நடைமுறைப்படுத்தி, மின்சார கேள்வியை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் இறக்குமதிக்கான டொலரை திரட்டிக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்குரிய எரிபொருள் தேவைக்கு சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை காணப்படுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகியனவற்று தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்காக இந்த அவசர சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு 90 ஆயிரம் மெற்றிக்டொன் பெற்றோல், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெட்றிக் டொன் டீசல், 90 ஆயிரம் மெட்றிக் டொன் மசகு எண்ணெய் ஆகியன தேவைப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்குரிய டொலர்களை வழங்குமாறும் இலங்கை மத்திய வங்கியிடம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய வங்கியின் உயர்பீட அதிகாரிகள், இலங்கை வங்கியின் தலைவர் உள்ளிட்ட இணைத்தலைவர்கள், மத்திய வங்கியின் தலைவர் உள்ளிட்ட இணைத்தலைவர்களுடன் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *