கொரோனா இரண்டாம் அலை உருவாகாமல் இருக்க மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், தொற்றாளர்கள் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, இரண்டாம் அலை உருவாகாமல் இருப்பதற்கு மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் – என்று இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (08) தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதியானது. அவருக்கு எவ்வாறு வைரஸ் பரவியது என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மறுபுறத்தில் இரண்டாம் அலை குறித்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவத்தளபதி மேலும் கூறியதாவது,

” வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தையடுத்து 310 பேரிடம் நேற்று  பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 210 பேர் தொடர்பான முடிவு இன்று  காலை கிடைத்தது. இதன்படி 210 பேருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் 186 பேரை ( தொற்றுக்குள்ளான கைதிகளுடன் இருந்தவர்கள், பழகியவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள்) பூனானி கொரோனா தடுப்பு முகாமுக்கு நேற்று  அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கை கடற்படைக்கு உரித்தான வளாகத்தில் இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலும் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின்கீழ்தான் நடவடிக்கை இடம்பெறும். அதேபோல் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிறைக்கைதிக்கு எவ்வாறு கொரோனா பரவியது என்பது பற்றி அராயப்பட்டுவருகின்றது. இதன்படி கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றது. நேற்றிரவு இதற்கான பணி ஆரம்பமானது.
வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரிஆர் பரிசோதனை அனைத்து முடிவுகளும் இன்று  மாலைக்குள் கிடைத்துவிடும். ஆகவே, குறித்த கைதிக்கு சிறைச்சாலைக்குள் வைத்து கொரோனா பரவியதா அல்லது வெளியில் பரவியதா என்பதை கண்டறியலாம்.

வெளி இடமாக இருந்தால் அது கந்தக்காடு முகாமாகவே இருக்கக்கூடும். ஏனெனில் சுதுவெல்ல உட்பட சில பகுதிகளில் இருந்த போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடையவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர்.எனவே, நாளைக்குள்  எப்படி என கண்டறிந்துவிடலாம்.
உலகில் சில நாடுகளில் இரண்டாம் அலை ஏற்பட்டு வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. இலங்கையில் சமூகத்தில் கொரோனா பரவுவதை கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பிறகு நாம் தடுத்திருந்தாலும், கொவிட் – 19 தொற்றியவர்கள் இலங்கையில் இருக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர் என்பதால் நாம் விழிப்பாகவே இருக்கவேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றவேண்டும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *