ஜனாதிபதி தேர்தலுக்கான நாடகத்தை அரங்கேற்றிவருகிறார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தலுக்கான நாடகத்தை அரங்கேற்றிவருகிறார். இதன்ஓர் பாகமே மத்திய வங்கி அதிகாரிகள்மீது தொடுக்கப்பட்ட விமர்சனமாகும்.”  – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தேர்தலின்போதும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. வெளிநாட்டிலுள்ளவர்களை அழைத்துவந்து ‘வெளிநாட்டு வீரர்கள்’ என ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்து வாக்குவேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அன்று  வெளிநாட்டு வீரர்கள் என விளிக்கப்பட்டவர்கள் இன்று வெளிநாட்டு குண்டுதாரிகள் என விமர்சிக்கப்படுகின்றனர்.

பொதுத்தேர்தலக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதும்  நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.இதில் நாயகன் ஜனாதிபதி. எதிரிகள் வங்கி அதிகாரிகள். இதன்காரணமாகவே மத்திய வங்கி அதிகாரிகள்கூட அழைக்கப்பட்டு கடுமையாக திட்டப்பட்டுள்ளனர்.

நிதி அமைச்சர், அமைச்சின் செயலாளர், மங்கிய வங்கி ஆளுநர் ஆகியோரை நியமித்தது யார்? இவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதியே வழங்கினார். எனவே, இவர்கள்தான் பொறுப்புகூறவேண்டும். அதனைவிடுத்து அதிகாரிகளை அழைத்து மிரட்டுவது ஏற்புடைய விடயமா? இதனால்தான் இந்த விடயத்தை நாடகம் என நான் விளிக்கின்றேன். ஜனாதிபதி அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது பிரச்சினை அல்ல. ஆனால், நாடகம் அரங்கேற்றப்படக்கூடாது என்பதை மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.

வழமையாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் செயலாளர்களே மாற்றப்படுவார்கள். ஆனால், இந்த ஆட்சியின்போது அதிகாரிகள்கூட மாற்றப்பட்டனர். தற்போது மத்திய வங்கியில் உள்ளவர்கள் இந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள். எமது அரசாங்கத்துக்குதான் பழைய அதிகாரிகளுடன் செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்புகூறவேண்டும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாலேயே இது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக கேள்விகளை எழுப்புகின்றேன். ஜனாதிபதி சட்டத்தின் பிரகாரமே செயற்படவேண்டும். ” – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *