கை – மொட்டின் கோரிக்கைக்கமையவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்! – அதை மாற்றவே முடியாது என்கிறார் ஹக்கீம்

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. எனினும், இறுதியில் அந்த இரண்டு கட்சிகளும் தெரிவுக்குழுவைப் பகிஷ்கரித்துள்ளன.”

– இவ்வாறு தெரிவுக்குழுவின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“இந்தத் தெரிவுக்குழு மிகவும் நம்பிக்கையான அடிப்படையில் எந்த முடிவை வழங்கினாலும் அது விமர்சிக்கப்படலாம்” எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைத் தவிர ஏனைய கட்சிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைப் பகிஷ்கரித்துள்ளன.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டதால், அதை மாற்ற முடியாது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசமைப்பு சபையின் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் எதிர்வரும் நாட்களின் இது சம்பந்தமாகப் பேசி இணக்கத்துக்கு வருவார்கள் என நம்புகின்றேன்.

கடந்த காலங்களிலும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டன. எனினும், இறுதியில் அரசமைப்பின் பிரகாரம் பிரச்சினைகளுக்கு நீதித்துறை தீர்வு கண்டது. நாட்டின் அரசமைப்பை மீறி எவரும் செயற்பட முடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *