ஷங்ரிலா ஹோட்டல் குண்டுதாரி பிள்ளைகள் இருவரை கட்டிப்பிடித்து அழுதபின்னர் வீட்டில் இருந்து வெளியேறினார்!

சங்கரில்லா ஹோட்டல் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய இல்ஹாம் அஹ்மட், தாக்குதலுக்கு 07 மணி நேரத்துக்கு முன்னர் தெமட்டகொடை, மஹவில பகுதியிலுள்ள வீட்டுக்கு வந்தார். தமது இரு பிள்ளைகளையும் கட்டிப்பிடித்து அழுதபின்னர் வீட்டிலிருந்து வெளியேறியதாக தற்கொலை குண்டுதாரியின் மைத்துனர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு தமது பெயரை வெளியிட வேண்டாம் எனவும் அவர் கோரினார். தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,

எனது ஏழாவது சகோதரியான பாத்திமா ஜிப்ரி தான் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் தெமட்டகொடையில் இறந்தார். அவர் சர்வதேச பாடசாலையில் கற்றார். அவர் அப்பாவித் தனமானவர். அதிக சமூக சேவைகள் புரிந்தார். 2012 நவம்பரில் தான் அவர் திருமணம் செய்தார். வீட்டில் குர்ஆனை மனனம் செய்வதில் ஆர்வம் காட்டினார். திருமணத்தின் பின்னர் அவருடன் பழகுவது குறைந்தது. இருவாரத்திற்கு ஒரு தடவை அவர் எமது வீட்டுக்கு வருவார்.
2016 ஜூன் மாதம் எனது திருமணம் நடந்தது. அதற்கு தங்கையோ மைத்துனரோ வரவில்லை. இஸ்லாமிய முறைப்படி இவ்வாறு திருமண வைபவம் நடத்துவது தவறென்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் அடிப்படைவாத போக்கில் சிந்திப்பதை உணர்ந்தேன். நாம் மதம் தொடர்பாக பேசுகையில் அவர்கள் மாற்றமான கருத்தை கூறுவர். வாக்களிப்பதற்கும் மைத்துனர் எதிராகவே இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *